பாலியல் துன்புறுத்தலைக் கண்டும் காணாமல் இருந்த தாய்க்குச் சிறை

பாலியல் துன்புறுத்தலைக் கண்டும் காணாமல் இருந்த தாய்க்குச் சிறை

1 mins read
55c477d6-191a-495f-931b-bab3fd5183c4
கருக்கலைப்பு செய்துகொள்ள மகளை மலேசியாவுக்கு அப்பெண் அழைத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

தமது மகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைப் பார்த்தும் அதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்காத குற்றத்துக்காகப் பெண் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது 12 வயதாக இருந்த மகளைத் தமது மகன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை அப்பெண் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அச்சிறுமி 5 வயதாக இருக்கும்போதே அப்பெண்ணின் மகன் அவருக்குப் பாலியல் ரீதியாகக் கொடுமை இழைத்ததாகக் அறியப்படுகிறது.

இது அப்பெண்ணுக்குத் தெரியும் என்றும் அதைப் பலமுறை பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குப் பதிலாக, தங்கையிடம் அவ்வாறு செய்யக்கூடாது என்று சாதாரணமாக அவர் அச்சிறுவனிடம் கூறிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அச்சிறுமி கர்ப்பமானார்.

வயிற்றில் இருக்கும் குழந்தை தமது மகனுடையதாக இருக்கக்கூடும் என்று பயந்து கருக்கலைப்பு செய்ய மகளை மலேசியாவுக்கு அப்பெண் அழைத்துச் சென்றார்.

ஆனால் கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்துவிட்டார்.

ஆனால் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் விளைவாக அக்குழந்தை அப்பெண்ணின் மகனுடையதல்ல என்று தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க அவரது 45 வயது தாயாரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருக்கலைந்த குழந்தையின் தந்தையுடைய அடையாளத்தை நீதிமன்றம் வெளியிடவில்லை.

ஆனால் வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிறுமியின் சகோதரனுக்கு பதினொன்றரை ஆண்டுகள் சிறையும் ஏழு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்