பாத்தாம்: இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நிகழ்ந்த கோ-கார்ட் விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாண்டதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்தது.
இச்சம்பவம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணி அளவில் பெங்கோங் பகுதியில் உள்ள கோல்டன் சிட்டி கோ கார்ட் நிலையத்தில் நிகழ்ந்தது.
இதுகுறித்து இந்தோனீசியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
அந்த 33 வயது பெண்ணின் கோ கார்ட் வாகனம் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் பிறகு டயர்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள் மீது மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தடுப்புகள் மீது அப்பெண்ணின் கோ கார்ட் வாகனம் மோதியதில் அவரது தலைக்கவசம் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அந்த நிலையத்தின் ஊழியர் ஒருவர் அப்பெண்ணை நோக்கி விரைந்தார்.
அப்பெண்ணின் நீண்ட கூந்தல் அவரது கோ-கார்ட் வாகனத்தில் சிக்கிக்கொண்டதை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அப்பெண் உடனடியாக அருகில் இருந்த மருந்தகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் மாண்டுவிட்டதை அங்குள்ள மருத்துவர் உறுதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறரின் கவனக்குறைவு காரணமாகப் அப்பெண் மரணம் அடைந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரியால் தீவுகள் காவல்துறை ஆணையர் ஸவானி பந்த்ரா அர்ஷியத் உறுதி அளித்தார்.
மாண்ட பெண்ணின் உடல் பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவரது இறுதிச் சடங்கு அதே நாள் மாலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

