புதுப்பிக்கப்பட்ட ஏழு காவல் சாவடிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முக்கியச் சாதனங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் புதுப்பிப்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தெலுக் பிளாங்கா, காமன்வெல்த், கம்போங் கெம்பாங்கான், தெம்பனிஸ் நார்த், கெபுன் பாரு, கிம் கியட் உள்ளிட்ட ஏழு காவல் சாவடிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்கூறிய ஆறு சாவடிகளும் இரண்டு மாதங்கள் தாமதமாகத் திறக்கப்படும் என்றும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) காவல்துறை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இந்தக் காவல் சாவடிகள் புதுப்பிப்பு பணிக்காகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. இவ்வாண்டு மார்ச் மாதம் திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாண்டு மே மாதத்திற்கு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புகார் அளிப்பதற்கான சுய உதவி இயந்திரங்கள், கண்டுபிடிக்கப்பட்ட பிறரின் சொத்துகளை ஒப்படைப்பதற்கான சுயசேவைப் பெட்டிகள் போன்ற தானியங்கி காவல்துறைச் சேவைகளை வழங்கும் முக்கியச் சாதனங்கள் பதுப்பிப்புப் பணியால் பாதிக்கப்படும் என்பதால் புதுப்பிப்புப் பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளது எனக் காவல்துறை மேலும் கூறியது.
2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை புதுப்பிப்புப் பணியால் பாதிக்கப்படும் ஹவ்காங்கில் அமைந்துள்ள ஏழாவது காவல் சாவடியின் திறப்பும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

