திறனாளர்களை ஈர்க்க சமூக சேவை அமைப்புகளுக்கு $100 மி. நிதி

திறனாளர்களை ஈர்க்க சமூக சேவை அமைப்புகளுக்கு $100 மி. நிதி

2 mins read
17a2ce45-f8ab-49de-a776-2a26d79a0486
சமூக சேவை விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுகிஃப்லி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய திறனாளர்களை ஈர்க்கவும் கைவசம் உள்ள திறனாளர்களைத் தக்கவைக்கவும் சமூக சேவை அமைப்புகள் அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு $100 மில்லியன் உதவி பெற உள்ளன.

புதிய உருமாற்ற நிலைத்தன்மைத் திட்டத்தின்கீழ் அந்த உதவி சாத்தியப்படும்.

நிறுவனத் திறன்களை மேம்படுத்த ஒவ்வோர் அமைப்பும் $200,000 வரை நிதி உதவி பெற இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

தொண்டூழிய நிர்வாகம், புத்தாக்கம் போன்றவற்றில் நிறுவனங்கள் தங்களது திறன்களை வளர்க்க அந்த நிதி அவற்றுக்குக் கைகொடுக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.

சமூக சேவை நிபுணர்களுக்கு சிறப்பான முறையில் சமூக சேவை அமைப்புகள் ஆதரவு வழங்குவதற்கு உதவ இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தேசிய சமூக சேவை மன்றமும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இத்திட்டத்தைத் தொடங்கி உள்ளன.

சமூக சேவை நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில் இந்தத் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சமூக சேவை நிபுணர்களின் எண்ணிக்கை 15,000ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 20,000க்கும் மேல் அதிகரித்தது.

பாய லேபார் குவார்ட்டர் பிளாசாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமூக சேவை விழாவில் கலந்துகொண்டு பேசிய திரு மசகோஸ், “சமூக சேவை நிபுணர்கள் தங்களது பணியில் சிறக்க நல்லதொரு வேலைச் சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது முக்கியம். அதனைத் தொடர்ந்து செய்வோம்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அத்தகைய நிபுணர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் தூண்ட வேலைச்சூழல் நன்றாக அமைய வேண்டும்.

“சாதகமான வேலைச் சூழலில் பணியாற்றும்போது கூடுதலாக வேலை செய்ய அந்தச் சூழல் உதவுவதாகப் பலரும் கூறுவதுண்டு,” என்று குறிப்பிட்டார்.

இரண்டு நாள் நடைபெறும் சமூக சேவை விழாவில் 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு வேலைகளை சமூக சேவை ஊழியர்கள் காட்சிப்படுத்துவர்.

பல்வேறு வாழ்க்கைத்தொழில் வழிகள் பற்றி வருங்கால ஊழியர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ள அவர்கள் அவ்வாறு செய்வர்.

குறிப்புச் சொற்கள்