சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளரும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினருமான லியோங் மன் வாய் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து பிப்ரவரி 20ஆம் தேதி விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக கட்சியின் சக தொகுதியில்லா உறுப்பினர் திருவாட்டி ஹேசல் புவா அதேநாளான பிப்ரவரி 20ஆம் தேதி தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 23) அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்கு எதிராக பிப்ரவரி 15ஆம் தேதி பொஃப்மா சட்டத்தின்கீழ் விடுக்கப்பட்ட திருத்த உத்தரவுக்கு திரு லியோங் பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
“சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மத்திய செயற்குழு திரு லியோங் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தமது செயலுக்கு வார்த்தைகளால் அல்லாது செய்கை மூலம் வெளிப்படுத்தியதில் பெருமை கொள்வதாகவும்,” கட்சி விளக்கமளித்தது.
திரு லியோங் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தொடர்வார் என்றும் கட்சி விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

