பயனாளர் தரவுப் பாதுகாப்பில் விதிமீறல்: கேரசலுக்கு $48,000 அபராதம்

பயனாளர் தரவுப் பாதுகாப்பில் விதிமீறல்: கேரசலுக்கு $48,000 அபராதம்

2 mins read
963e7291-a6d0-4a02-afa0-4add7b83d481
2022ஆம் ஆண்டு நிகழ்ந்த தரவுக் கட்டுப்பாட்டு மீறல்கள் தொடர்பில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தரவுக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கேரசல் இணையவழி விற்பனைத் தளத்துக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு தனித்தனியாக நிகழ்ந்த இரண்டு தரவுக் கட்டுப்பாட்டு மீறல் சம்பவங்களின் தொடர்பில் அந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அவற்றில், ஒரு விதிமீறலில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் இருந்தன. மற்றொரு விதிமீறல் 44,477 கேரசல் பயனாளர்களின் தரவுகள் சம்பந்தப்பட்டது.

சிங்கப்பூர் மட்டுமல்லாது மலேசியா, இந்தோனீசியா, தைவான் மற்றும் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள் அந்தப் பயனாளர்கள்.

இந்த விவரங்களை தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் (பிடிபிசி) கடந்த வியாழக்கிழமை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த இரண்டு கட்டுப்பாட்டு மீறல் சம்பவங்களின் தொடர்பில் அபராதம் விதிக்கப்படுவதற்கான அவசியம் குறித்தும் ஆணையம் அதில் விளக்கி உள்ளது.

இணைய ஊருவல் கருத்துப் பரிமாற்றத் தளத்தில் 2.6 மில்லியன் கேரசல் கணக்குகளின் விவரங்கள் அடங்கிய தரவுத்தளம் $1,000க்கு விற்பனைக்கு விடப்பட்டு இருந்தது.

2ஜிபி அளவுள்ள தரவுகள் அந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பதிவேற்றப்பட்டு இருந்தன. அது பற்றி 2022 அக்டோபர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

தரவுகள் ஊடுருவப்பட்டது குறித்து கேரசல் அறிந்திருக்கவில்லை என்றும் 2022 அக்டோபர் 13ஆம் தேதி ஆணையம் அதுபற்றி கேரசலுக்குத் தெரியப்படுத்தியது.

மற்றொரு கட்டுப்பாட்டு மீறல் இதற்கு முன்னதாக 2022 ஜூலை 13ஆம் தேதி நிகழ்ந்தது.

கேரசல் தகவல் பரிமாற்ற அம்சத்தில் மாற்றங்கள் செய்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 44,477 பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் அப்போது கசிந்தன.

2022 ஆகஸ்ட் 18ல் பயனாளர் ஒருவர் புகார் அளித்த பின்னரே தரவுகள் கசிந்த விவரம் கேரசலுக்குத் தெரியவந்தது. ஆறு நாள்களுக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டது.

தனது தளத்தைச் சரிவர சோதிக்க கேரசல் தவறியதாக ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்