உள்துறை அமைச்சின்புதிய செயலாக்க நிலையம்

உள்துறை அமைச்சின்புதிய செயலாக்க நிலையம்

2 mins read
7cb8b20b-0235-4d7a-a132-1a4a8689e14d
சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உள்துறைக் குழு அதிகாரிகளின் முயற்சிகளைக் கொண்டாடும் விதமாக முதல்முறை அனுசரிக்கப்படும் உள்துறைக் குழு தினத்தில் உரையாற்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் வெவ்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகள் ஒரே இடத்தில் வேலைசெய்யும் விதமாக, புதிய செயலாக்க நிலையத்தை உள்துறை அமைச்சு கட்டிவருகிறது.

பிரச்சினைகளை விரைவாகவும் விரிவான முறையிலும் அவர்கள் கையாள அது உதவும்.

புதிய உள்துறைக் குழு செயலாக்க நிலையத்தில் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவர் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

“999 அல்லது 995 ஆகிய அவசர உதவிக்கான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது முதல் பிரச்சினைக்குரிய சம்பவங்களைக் கையாளத் தேவைப்படும் வளங்களை சம்பவ இடங்களுக்கு அனுப்புதல் வரை, விரைவாக அதேநேரத்தில் விரிவாக நடவடிக்கை மேற்கொள்ள இந்நிலையம் வகைசெய்யும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.

சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உள்துறைக் குழு அதிகாரிகளின் முயற்சிகளைக் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 24ஆம் தேதி முதல்முறை அனுசரிக்கப்படும் உள்துறைக் குழு தினத்தில் திரு சண்முகம் உரையாற்றினார்.

உள்துறைக் குழுப் பிரிவுகள் அனைத்தும் ஆளில்லா வானூர்திகளை மேலும் திறம்படப் பயன்படுத்த உதவும் முயற்சிகளை அமைச்சு மேற்கொள்ளும் என்றார் அவர்.

நெருக்கடிகள், குற்றச் செயல்களைக் கையாளும்போதும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும் ஆளில்லா வானூர்திகள் பயன்படும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது காவல்துறையின் தலைமையில் செயல்படும் உள்துறைக் குழு ஆளில்லா வானூர்திப் பிரிவின் வளங்களை உள்துறைக் குழுக்கள் அனைத்தும் பயன்படுத்துகின்றன என்றாரவர்.

தமது உரையில், 27 ஆண்டுகளுக்கு முன்னர் உள்துறைக் குழு என்ற கருத்தை முன்வைத்த உள்துறை முன்னாள் அமைச்சர் வோங் கான் செங்கிற்கு திரு சண்முகம் புகழாரம் சூட்டினார்.

பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற உள்துறைக் குழு தினத்தில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (நடுவில்),  முன்னாள் உள்துறை அமைச்சர் வோங் கான் செங் (வலது).
பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற உள்துறைக் குழு தினத்தில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (நடுவில்), முன்னாள் உள்துறை அமைச்சர் வோங் கான் செங் (வலது). - படம்: சாவ்பாவ்

சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ‘சிட்டிசன்ஸ் ஆன் பேட்ரோல்’ திட்டத்தின் தொண்டூழியர்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்