தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேம்படுத்தப்பட்ட மசே நிதி லைஃப்: ஓய்வுக்காலத்தில் மாதம் $3,300க்கு மேல் பெறமுடியும்

2 mins read
50ad6f3a-0b9d-4ee1-b2fa-5ef5f3ebecec
மேம்படுத்தப்பட்ட திட்டம் மூலம் ஓய்யவுக்காலத்தில் மாதம் $800 கூடுதலாகப் பெறுவதற்கு முன்கூட்டியே சேமிக்க முடியும் - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓய்வுக்காலத்தில் மாதாமாதம் $3,300 முதல் $4,000 வரைகூட பெறமுடியும் என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

புதிதாக மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி (மசே நிதி) ஃலைப் திட்டத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அந்தத் தொகையைப் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது.

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ முதலீட்டுப் பிரிவு ஆசிரியர் திரு டான் ஊய் பூன் எழுதி உள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்து உள்ளார்.

முதுமையை எட்டும்போது பயனுள்ள தொகையை வழங்கக்கூடிய, உத்தரவாத ஓய்வுக்காலத் திட்டத்திற்கு இப்போதிருந்தே சேமிக்க இது வழிகாட்டுகிறது.

எனவே மசே நிதி உறுப்பினர்களால் வரவேற்கக்கூடிய செய்தி இது.

அண்மையில் நடைபெற்ற ‘முன்னேறு சிங்கப்பூர்’ கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள், ஓய்வுக்காலத்தில் அதிக வருமானம் ஈட்ட மசே நிதி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிப்ரவரி 16ஆம் தேதி தாக்கல் செய்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மசே நிதி லைஃப் வழங்குதொகை வரம்பைக் கணிசமாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தார்.

2025ஆம் ஆண்டு 55 வயதை எட்டுவோரும் ஏற்கெனவே அந்த வயதைக் கடந்தோரும் தங்களது ஓய்வுக்கால வருவாயை மூன்றில் ஒரு பங்கு உயர்த்துவதற்கு உதவியாக சேமிக்கக்கூடிய தெரிவை அந்தத் திட்டம் வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த ஆண்டு 55 வயது ஆனவர்களின் முழுமையான ஓய்வுக்காலத் தொகை ($213,000) புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓய்வுக்காலக் கணக்கிற்கு மாற்றப்படும். மசே நிதி லைஃப் திட்டத்திற்கான மூலதனத்தை உருவாக்க அவ்வாறு செய்யப்படும்.

அதன் மூலம், முழுமையான ஓய்வுக்காலத் தொகையை உறுப்பினர்கள் இரட்டிப்பாக்க, அதாவது $426,000 வரை சேமிப்பதற்கான வாய்ப்பை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

புதிய மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலத் தொகை (இஆர்எஸ்) திட்டத்தின்கீழ் அது சாத்தியப்படும்.

அந்த மாற்றம் முக்கியமானது.

காரணம், 65 வயது ஆகும்போது மாதந்தோறும் ஏறக்குறைய $3,330 வீதம் இறுதிக்காலம் வரை பெறுவதற்கு ஏதுவாக அவர்கள் புதிய தொகையை நிரப்ப அத்திட்டம் வழிவகுக்கிறது.

முன்னைய இஆர்எஸ் திட்டத்தின்கீழ் $2,530 வரை மட்டுமே மாத வழங்குதொகை பெறமுடியும். மேம்படுத்தப்பட்ட திட்டத்தினால் கூடுதலாக $800 வரை பெறலாம் என்று திரு டான் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதி