9 வயது சிறுவனுக்கு கொவிட்-19, இதய தசையில் வீக்கம், பக்கவாதம்

9 வயது சிறுவனுக்கு கொவிட்-19, இதய தசையில் வீக்கம், பக்கவாதம்

2 mins read
3d8e6f84-c434-42ed-8e92-bbfb4d63ca6b
இதய தசையில் வீக்கம், பக்கவாதம் போன்றவற்றால் சோர்ந்துள்ள சிறுவனை அவனது பெற்றோர் தங்களது அன்பால் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளியின் முதல் நாளை எதிர்பார்த்து காத்திருந்த 9 வயது சிறுவன் மேட் ஏரோன் செமோடியோவுக்கு ஜனவரி 4ஆம் தேதி பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுவனின் வாழ்க்கையை புரட்டிப்போடும் விதமாக கொவிட்-19, இதய தசையில் வீக்கம், பக்கவாதம் என மூன்று சுகாதார பிரச்சினைகள் அவரைத் தாக்கியது. பக்கவாதத்தால் மேட்டின் இடப்பக்க உடல் பாதிக்கப்பட்டது.

உடனடியாக மேட், கே கே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சில மணி நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

இதயம் சரியாக வேலை செய்யாததால் மேட்டிற்கு சுவாச கருவி மூலம் உயிர்வாயுவை செலுத்தினர். நம்பிக்கை இழக்காமல் மருத்துவர்களும் தொடர்ந்து போராடினர்.

ஜனவரி 16ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மேட் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான். அதன் பின்னர் உடல்நலம் நன்கு தேறிவிட்டதால் பிப்ரவரி 8ஆம் தேதி தமது வீட்டிற்குச் சென்றான் சிறுவன்.

இருப்பினும் பிப்ரவரி 11ஆம் தேதி கிருமித்தொற்று காரணமாக மூன்று நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் மேட்.

பின்பு பிப்ரவரி 22ஆம் தேதி மற்றோரு கிருமித்தொற்றால் ரத்த வாந்தி எடுத்த மேட் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய தசையில் வீக்கம், பக்கவாதம் போன்றவற்றால் சோர்ந்துள்ள சிறுவனை அவனது பெற்றோர் தங்களது அன்பால் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மேட்டிற்கு ஒரு சின்ன விக்கல் வந்தால் கூட பதறிவிடுவதாக அவரது பெற்றோர் கூறினர்.

மேட்டின் பெற்றோர் பிலீப்பீன்சைச் சேர்ந்தவர்கள். மேட்டின் தாய் சிங்கப்பூர் நிரந்தரவாசி. மேட் வெளிநாட்டவர் என்பதால் அவரது சிகிச்சைக்கான செலவுக்கு மானியம் கிடைக்காது.

மருத்துவ செலவுகளை பொதுமக்கள் கொடுக்கும் நிதி உதவி, சொந்த சேமிப்பு, காப்புறுதி போன்றவற்றின் மூலம் சமாளித்து வருவதாக அவர்கள் கூறினர். இருப்பினும் மருத்துவ செலவுகள் கூடிக்கொண்டே போவதால் என்ன செய்வது என்று தெரிவில்லை என்று தம்பதி வருத்தம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்