சொற்களம் 2024: உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விவாதப் போட்டி

சொற்களம் 2024: உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விவாதப் போட்டி

2 mins read
5635cc63-c9c2-4ea7-be09-423d18ac46dc
பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சொற்களம் 2024 விவாதப் போட்டி. - படம்: பாலாஜி பாண்டுரங்கம்
Google News Preferred Icon

இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும், நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சொற்களம் 2024 விவாதப் போட்டியின் முதல் சுற்று, பிப்ரவரி 17ஆம் தேதி பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

பெருந்தொற்றினால் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்போட்டி, தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இந்த விவாதப் போட்டியின் 14ஆம் ஆண்டு இது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், மொத்தம் 29 பள்ளிகளைச் சேர்ந்த 116 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

‘இளையர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு சமுதாய எதிர்பார்ப்புகளே காரணம்’ எனும் தலைப்பை ஒட்டியும் வெட்டியும் பள்ளிகள் ஒன்றோடொன்று மோதின.

விவாதம் நடைபெற்ற ஒவ்வோர் அறைக்கும் இரண்டு நடுவர்கள் என மொத்தம் பதினான்கு நடுவர்களும், ஒவ்வோர் அறைக்கும் ஓர் அவைத் தலைவரும், நேரக் காப்பாளர் ஒருவரும் இருந்தனர். பேசப்படும் பொருள், பேச்சு, வாதிடும் திறன், தலைப்பை அணுகும் முறை, ஆய்வுத் திறன் ஆகிய அடிப்படைகளில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஐந்து கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டியின் இறுதிச்சுற்று, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்துகொண்ட ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளி மாணவர் தென்னரசு பாவலன், 15, “கடந்த இரு வாரங்களாகவே இப்போட்டிக்காக எங்கள் அணி தயாராகி வருகிறது. ஆசிரியர், பெற்றோரின் உதவியுடன் நன்கு பயிற்சி செய்தோம். இறுதிச் சுற்று வரை செல்வோம் என நம்புகிறோம்,” என்றார்.

சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி ஹரிநாராயணன் ஜானவி, 15, “எனக்கு சிறு வயதிலிருந்தே மேடைப் பேச்சில் ஆர்வம் உண்டு. சொற்பொழிவாளர்கள் பலரின் உரைகளைக் கேட்பேன். எங்கள் அணியில் இருக்கும், என்னைவிட மூத்த மாணவர்களிடமிருந்தும் பல அறிவுரைகள் கிட்டின. ஆசிரியர்களும் உதவி வருகின்றனர். வெற்றி, தோல்விக்கு அப்பால், இதில் கலந்துகொண்டதே பெருமை,” என்றார்.

மாணவர்களைத் தயார்செய்து அழைத்து வந்திருந்த கோவன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திலகவதி சங்கர், “தலைப்பு கொடுக்கப்பட்டதிலிருந்தே மாணவர்கள் உற்சாகத்துடன் தயார்செய்யத் தொடங்கினர். சீனப் புத்தாண்டு விடுமுறை நாள்களில்கூட இணையம்வழி இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். மாணவர்களின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது,” எனச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
போட்டிஉயர்நிலைப் பள்ளிமாணவர்கள்

தொடர்புடைய செய்திகள்