‘ஏற்கெனவே 55 வயதை எட்டியவர்களின்மசேநி சிறப்புக் கணக்கை மூடக்கூடாது’

‘ஏற்கெனவே 55 வயதை எட்டியவர்களின்மசேநி சிறப்புக் கணக்கை மூடக்கூடாது’

படம்: பிஸினஸ் டைம்ஸ்

26 Feb 2024 - 6:54 pm

2 mins read

ஐம்பத்தைந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மத்திய சேம நிதி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கை மூடுவதற்குப் பதிலாக ஏற்கெனவே 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்தவர்களுக்கு அப்படியே மூடாமல் வைத்திருப்பது நியாயமாக இருக்கும் என்று பிப்ரவரி 26ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ஃபூ மி ஹார் யோசனைத் தெரிவித்தார்.

அதாவது தற்போதைய திட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இளைய மசேநிதி உறுப்பினர்களுக்கு மாற்றத்தை செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரவுசெலவுத் திட்ட முதல் நாள் விவாதத்தின்போது 55 வயது அதற்கு மேற்பட்ட மசேநி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கு மூடப்படுவது குறித்து பல மசெக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர்.

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம் 2025ஆம் ஆண்டில் நடப்புக்கு வருகிறது. சிறப்புக் கணக்கு மூடப்படுவதால் அதில் உள்ள பணம் ஓய்வுக்கால கணக்குக்கு ஓய்வுக்கால முழுமையான குறைந்தபட்ச தொகை நிரம்பும் வரை மாற்றப்படும். எஞ்சிய பணம் சாதாரண கணக்குக்கு மாற்றப்படும்.

சிறப்புக் கணக்கு மற்றும் ஓய்வுக்கால கணக்கில் உள்ள தொகைக்கு குறைந்தது நான்கு விழுக்காடு வட்டி கிடைக்கிறது. சாதாரண கணக்குக்கு 2.5 விழுக்காடு வட்டி மட்டுமே கிடைக்கும்.

சிறப்புக் கணக்கு மூடப்பட்டதும் மசேநி உறுப்பினர்கள் தங்களுடைய ஓய்வுக்கால கணக்கில் அதிக சேமிப்பை பெற முடியும். ஆனால் சாதாரண கணக்கில் குறைந்த வட்டியை மட்டுமே பெற முடியும்.

“இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் உள்ளார்ந்த காரணத்தை நான் ஆதரிக்கிறேன். அதே வேளையில், சிறப்புக் கணக்குகள் திடீரென மூடப்படுவது பல நடுத்தர வருமான மூத்தவர்களை பாதிக்கும்,” என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

பெரும்பாலான மூத்தவர்கள் தங்களுடைய ஓய்வுக்காலத்தில் மசேநி சேமிப்பை முக்கிய ஆதாரமாக நம்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திடீர் மாற்றம் அவர்களுடைய ஓய்வுக்காலத் திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்