வரவிருக்கும் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர்

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் 2024 மீதான விவாதம் தொடங்கியது

3 mins read
345b3586-42e4-4946-9c81-12d9174667e0
வரவிருக்கும் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினத் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிட்ட $131.4 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்திற்கான ஆதரவு முழுமையாக இருந்தபோதும், மத்திய சேமநிதி சிறப்புக் கணக்கு மூடப்படுவது, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் போன்றவை தொடர்பான சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்து திங்கட்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் முதல் நாளில் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) வரவிருக்கும் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினத் திட்டங்கள் குறித்துப் பேசினர். அவர்களில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், நியமன உறுப்பினர்கள் நால்வரும் அடங்குவர். விவாதம் ஏறக்குறைய எட்டு மணி நேரம் நீடித்தது.

நிச்சயமற்ற உலகச் சூழலுக்குத் தயாராகும் நிலையிலும், சிங்கப்பூரர்களின் உடனடித் தேவைகளைச் சமாளிக்க உதவும் நிதி ஆதரவைப் பலர் வரவேற்றனர்.

மத்திய சேமநிதி சிறப்புக் கணக்கு மாற்றங்கள், வீட்டு வசதி, வேலையின்மை ஆதரவு போன்றவை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. திங்கட்கிழமை தொடங்கிய வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம், புதன்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விவாதத்தை நிறைவு செய்து உரையாற்றுவார்.

பல தொழில்துறைகளிலும் சிங்கப்பூரர்களின் வேலைத்தகுதியை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு அவர்கள் அறைகூவல் விடுத்தனர். ஆட்குறைப்பு செய்யப்பட்ட, குறைந்த வருமான ஊழியர்களுக்குக் கூடுதல் உதவி கோரியும் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.

மூத்தோரையும் ஓய்வுக்காலத் திட்டங்களையும் பாதிக்கும் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட நடைமுறைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை கவலை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் ஒன்று பணி ஓய்வு. 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான மத்திய சேம நிதி சிறப்புக் கணக்கு 2025லிருந்து மூடப்படுவது குறித்துப் பலர் பேசினர்.

மசேநிதி சாதாரண கணக்கு வட்டி விகிதம் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யுமா என திரு சக்தியாண்டி சுப்பாட் கேட்டார்.

உதாரணமாக, மத்திய சேமநிதிக் கழகத்தின் வட்டி விகிதங்களை மட்டுமே எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களையும் கருத்தில் கொள்ளலாம் என அவர் பரிந்துரைத்தார்.

ஓய்வுபெற்றவர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி தொடர்பில் ஆதரவு அளிப்பதற்கான தேவை பற்றியும் எம்.பி.க்கள் பேசினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யிப் ஹொன் வெங், லிம் பியோவ் சுவான் இருவரும் மூத்தோரை, குறிப்பாக சொந்த வீட்டு உரிமையாளர்களைப் பாதுகாக்க ‘நியாயமான’ சொத்து வரி முறைக்கு அறைகூவல் விடுத்தனர்.

40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் $4,000 நிதி பெற வகைசெய்யும் மேம்படுத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை பலர் வரவேற்றாலும், திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்தனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வட்டியில்லா ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கடன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளி கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் தெரிவித்தார்.

விருப்பமின்றி வேலையில்லாமல் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கான மறுவேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டம் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுதல் விவரங்களைக் கோரினர். 

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்வரவுசெலவுத் திட்டம்