சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் வளம்பெறும்: துணைப் பிரதமர் ஹெங்

சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் வளம்பெறும்: துணைப் பிரதமர் ஹெங்

2 mins read
2e99b671-07c4-4ddc-8ae6-9ef654c8f845
துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கடுமையான சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் மேலும் வளம் பெறும் சூழல் இருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிமீது முழு நம்பிக்கை இருப்பதற்கான காரணங்களை அவர் மன்றத்தில் விளக்கினார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று திரு ஹெங் உரையாற்றினார்.

உட்புறக் கட்டுப்பாடுகளாலும் கடுமையான வெளிப்புறச் சூழல்களாலும் இனி வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி அடைவது கடினமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இருப்பினும், அத்தகைய சிரமங்களை எல்லாம் கடந்து சிங்கப்பூர் மிளிரும் என்று நம்புவதற்கு வலுவான அடைப்படைக் காரணங்கள் உள்ளன என்றார் திரு ஹெங்.

உற்பத்தித்திறன் அடிப்படையிலான மூன்று வித வளர்ச்சியுடன் கைகோத்து சிங்கப்பூர் தொடர்ந்து மறுகட்டமைப்பைச் செய்து வருவதாகக் கூறிய அவர், அந்த மூன்றுவித வளர்ச்சியை விளக்கினார்.

“சிங்கப்பூரின் பொருளியலை உருமாற்றுவதற்கான முயற்சிகளைத் தக்கவைத்தல், வலுவான புத்தாக்கச் சுற்றுச்சூழலை உருவாக்குதல், உலகிற்கு நம்பத்தகுந்த பங்காளியாகத் தொடர்ந்து நீடித்தல் ஆகியன அவை,” என்றார் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.

அத்துடன், சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களையும் அவர் விவரித்தார்.

“உலக நாடுகள் தற்போது மெதுவான வளர்ச்சியைச் சந்தித்து வருவதோடு அதிகரிக்கும் பணவீக்கச் சூழலும் நிலவுகின்றன.

“முப்பதாண்டுக்கும் மேலாக உலகமயமாதல் மூலம் நற்பலன்களை அடைந்தபோதிலும் தற்போது ஒத்துழைப்பு என்பது போட்டி என மாறிவிட்டது.

“அதற்கு தொழில்நுட்ப மாற்றமும் ஒரு காரணம்.

“நாடுகளுக்கு இடையிலும் தொழிற்கூடங்களுக்கு இடையிலும் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, வேலைகளை மறுவடிவமைத்து உள்ளது தொழில்நுட்ப மாற்றம்.

“பொருளியல் போட்டி மூலம் நன்மைகளை உருவாக்கித் தந்த உலகமயமாதல் நிலவரம், தற்போது அரசியல் சீரமைப்பு காரணமாக தனித் தனி துருவமாகி இருப்பதை நாம் காணமுடியும்.

“இவற்றுடன், அண்மையில் ஏற்றம் கண்ட புவிசார் அரசியல் அமைதியின்மை நிச்சயமற்ற எதிர்காலத்துக்குத் துணைபோய் உள்ளது.

“அதேநேரம் உள்நாட்டிலும் சில சிரமங்கள் உள்ளன. பக்குவமடைந்த பொருளியல் நாடாக சிங்கப்பூர் உருவானாலும், வேகமான வளர்ச்சிக்கு அத்தகைய சிரமங்கள் தடைபோடுகின்றன.

“ஊழியர் வளம், நில வளம் ஆகியவற்றில் பற்றாக்குறை, கரிம வெளிப்பாடு போன்றவை வேகத்தைத் தடுக்கின்றன,” என்று திரு ஹெங் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்