சாலையோரப் பாதுகாப்புக் கம்பியில் தொங்கிய அழுகிய சடலம்

சாலையோரப் பாதுகாப்புக் கம்பியில் தொங்கிய அழுகிய சடலம்

படம்: ஷின் மின் நாளேடு

27 Feb 2024 - 7:25 pm

1 mins read

அங் மோ கியோ அவென்யூ 3ல் மத்திய விரைவுச்சாலைக்கு இட்டுச் செல்லும் சாலைக்கு அருகில் திங்கட்கிழமை (பிப்ரவரி 26), 36 வயது ஆடவரின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

திங்கட்கிழமை பிற்பகல் காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் அந்தச் சாலையில் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்ததாக ஷின் மின் நாளேடு தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சென்ற அந்நாளேட்டின் செய்தியாளர், ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நடைபாதை ஒதுக்குப்புறமாகவும் குறுகலாகவும் இருந்ததாகக் கூறினார். அங்கிருந்து ஏறத்தாழ 60 மீட்டர் தொலைவில் அங் மோ கியோ அவென்யூ 10ன் புளோக் 560 அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.

சாலைப் பாதுகாப்புக் கம்பியிலிருந்து தொங்கிய நிலையில் ஆடவரின் சடலத்தைப் பார்த்த ஒருவர் தகவல் கொடுத்ததாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் வழிப்போக்கர் ஒருவர் கூறியதாக நாளேடு கூறியது.

பெயர் கூற மறுத்துவிட்ட அந்த வழிப்போக்கர், ஆடவர் இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கக்கூடும் என்று தாம் கணிப்பதாகக் குறிப்பிட்டார்.

மாண்ட ஆடவரின் கழுத்தைச் சுற்றி கயிறு ஒன்று காணப்பட்டதாகத் தெரிகிறது.

ஏஷியா ஒன்னின் கேள்விக்குப் பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படை, சம்பவம் குறித்து திங்கட்கிழமை முற்பகல் 11.50 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.

அவ்விடத்தில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்த தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயல் ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்