சமூக சேவை அமைப்பான ஏபிஎஸ்என், புதிய வளாகத்தைக் கட்டுவதற்கான நில அகழ்வுச் சடங்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) நடத்தியது.
இது, அந்த அமைப்பிற்கு ஒரு மைல்கல்.
2026ஆம் ஆண்டில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த வளாகத்தில் சிறப்புத் தேவை உடையோருக்கான இரண்டு பள்ளிகளின் மாணவர்களுக்கு இடம் இருக்கும்.
நில அகழ்வுச் சடங்கில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வு 8 அங் மோ கியோ ஸ்திரீட் 54ல் உள்ள புதிய தளத்தில் நிகழ்ந்தது. ஏபிஎஸ்என் நடத்தும் இரண்டு பள்ளிகள் அந்த வளாகத்திற்கு இடமாறும்.
பிரதமர் லீ, அதுபற்றி ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை படிப்படியாக நாம் உருவாக்கி வருகிறோம்.
“சிறப்புத் தேவைகள் உடைய மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கி, அவர்கள் கல்வி கற்கும் காலம் முழுவதும் ஆதரவு வழங்கக்கூடிய புதிய வளாகம் கட்டி முடிக்கப்படும் நாளை எதிர்பார்க்கிறேன்,” என்று திரு லீ அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வயதான மற்றும் இளைய மாணவர்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்பதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு இடையிலான அணுக்கமான தொடர்புகளையும் புதிய வளாகம் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மறுமேம்பாடு கண்டுள்ள பள்ளிக்கூட தளம், 400 தொடக்கநிலை மாணவர்களுக்கும் 350 உயர்நிலை மாணவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். வளாகத்தைக் கட்டி எழுப்ப ஆகக்கூடிய $92 மில்லியன் செலவில் பெரும்பகுதியை கல்வி அமைச்சு வழங்கும்.
ஏபிஎஸ்என் சாயோயாங் பள்ளி, 7 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளியாக விளங்குகிறது. தற்போது அதில் 370 மாணவர்கள் உள்ளனர்.
அதேபோல, ஏபிஎஸ்என் தங்ளின் பள்ளிக்கூடம் 13 வயது முதல் 16 வயது வரையிலான 290 மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது.
லேசான அறிவாற்றல் திறன் குறைந்த தனிப்பட்டவர்களுக்கு ஆதரவு சேவைகளையும் ஏபிஎஸ்என் வழங்குகிறது.
புதிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
2026ஆம் ஆண்டு ஏபிஎஸ்என் சமூக சேவை அமைப்பின் 50வது ஆண்டு ஆகும். அதன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பணிபுரியும் அலுவலர்களும் அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் புதிய வளாகத்துக்கு இடமாறுவர்.
அந்த அமைப்பின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பணிபுரியும் அலுவலர்களும் 2026 ஜனவரியில் புதிய வளாகத்திற்கு இடமாறுவர்.

