ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான இடங்களிலும் ‘இடிபி ரினியுவபள்ஸ் ஏபிஏசி’ சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தும்.
மொத்தம் 1,075 வீவக புளோக்குகளிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 101 கட்டடங்களிலும் 320,000க்கும் அதிகமான சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படும். அவற்றின் மொத்த மின்சாரத் தயாரிப்பு ஆற்றல் 130 மெகாவாட்-பீக்.
முன்னர் கணிக்கப்பட்ட 113 மெகாவாட்-பீக் அளவைவிட இது ஏறக்குறைய 15 விழுக்காடு அதிகம் என்று வீவக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தவுடன், இத்திட்டம் 50,000க்கும் அதிகமான நாலறை வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும். மேலும், ஒவ்வோர் ஆண்டும், குறைந்தது 96,360 மெட்ரிக் டன் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் ஆற்றலை இத்திட்டம் கொண்டுள்ளது.
சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தும் பணி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மூன்றாம் காலாண்டில் அது நிறைவுபெறும்.
அந்த 1,075 வீவக புளோக்குகள் அல்ஜுனிட்-ஹவ்காங், நீ சூன், செங்காங் நகர மன்றங்களின்கீழ் வருகின்றன.
அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள், கடைத்தொகுதிகள் உள்ளிட்டவை அடங்கும்.
“எஞ்சிய வீவக புளோக்குகளுக்கான சூரிய சக்தித் தகடுகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டங்கட்டமாகப் பொருத்தப்படும். ஒவ்வொரு புளோக்கின் நிலையைப் பொறுத்து அத்தகடுகளைப் பொருத்துவது குறித்துத் தீர்மானிக்கப்படும்,” என்று வீவக கூறியது.