2018ஆம் ஆண்டில் கேலாங் வட்டாரத்தில் உள்ள மலிவுக் கட்டண ஹோட்டலில் முன்னதாகத் தமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்ற ஆடவர் பிப்ரவரி 28ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார்.
இவர் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் கொலை குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் ஆவார்.
பங்ளாதேஷியரான 35 வயது அகமது சலீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
அதிபரிடம் அகமது கருணை மனு சமர்ப்பித்ததாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாயம் பூசுபவராகப் பணிபுரிந்த அகமது, 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று கோல்டன் டிராகன் ஹோட்டலில் உள்ள அறையில் இந்தோனீசியப் பணிப்பெண்ணான நூர்ஹிடாயாத்தி வார்டோனோ சுராட்டாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
நூர்ஹிடாயாத்தி இன்னோர் ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவருடனான உறவை முறித்துக்கொள்ள மறுத்துவிட்டதை அடுத்து அகமது அவரைக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதியன்று அகமது மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதியன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மரண தண்டனையை எதிர்த்து அகமது மேல்முறையீடு செய்தார்.
அவரது மேல்முறையீடு 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது.
அகமதுக்குச் சட்ட ரீதியாக உதவி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டதாக காவல்துறை கூறியது.