சிங்கப்பூர் தொழிற்சாலையை மூடவுள்ள டெட்ரா பேக்; 300 ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
95665a04-cb0c-46cb-8ca3-983e1c011832
ஜூரோங்கில் அமைந்துள்ள ‘டெட்ரா பேக்’ நிறுவனத்தின் ஆலை. - படம்: இணையம்

உணவு பதப்படுத்துதல், பொதியாக்க நிறுவனமான ‘டெட்ரா பேக்’, ஜூரோங்கில் இயங்கிவரும் அதன் ஆலையை மூடவுள்ளது.

இதனால் சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 300 ஊழியர்கள் பாதிப்படைவர் என்று கூறப்படுகிறது.

மாறிவரும் சந்தைச் செயல்பாடுகள் காரணமாக அடுத்த 12 மாதங்களில் வட்டார நாடுகளில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்குள் சிங்கப்பூர் சார்ந்த தன் பொதியாக்கப் பொருள் உற்பத்தியை ஒருங்கிணைப்பதாக நிறுவனம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.

உணவு பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் சங்கத்தில் சிங்கப்பூரின் டெட்ரா பேக் ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவுவது தொடர்பில் சங்கம் நிறுவனத்துடன் அணுக்கமாகச் செயலாற்றி வருவதாகக் கூறியது.

இதன்படி ஆட்குறைப்பு ஆதரவுத் தொகுப்புத் திட்டங்களுக்கு ஊழியர்கள் தகுதிபெறுவர்.

இந்நிலையில், சிங்கப்பூர் சந்தைக்குத் தான் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கேட்ட கேள்விக்கு டெட்ரா பேக் தெரிவித்தது.

வர்த்தக மேலாண்மை, மனிதவளம், விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கெனத் தொடர்ந்து இங்கு அதன் அலுவலகத்தை நடத்திவரும் என்றது டெட்ரா பேக் நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்