தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$5.6 மி. கையாடல் செய்ததாக பெண்மீது குற்றச்சாட்டு

2 mins read
bfcafe7f-6f1f-430c-ab90-2b372a8494d3
படம்: - தமிழ்முரசு

ஆடம்பரக் கார், பொருள்கள் போன்றவற்றை வாங்க 5.6 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்களை கையாடல் செய்ததாக பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஹோ காய் சின் என்ற அந்த சிங்கப்பூர் பெண்மீது மோசடி, பொய்யான தகவல் கொடுத்தது உள்ளிட்ட 44 குற்றச்சாட்டுகள் புதன்கிழமை (பிப்ரவரி 28) சுமத்தப்பட்டன.

கையாடல் செய்த பணத்தின் மூலம் 31 வயது ஹோ 362,000 மதிப்புள்ள மெர்சிடிஸ் கார் வாங்கியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பைபிட் பின்டெக் என்ற நிறுவனம் ஹோ மீது வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அதில் ஹோ கையாடல் செய்த நிதியை நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஹோ, வீசெயின் பின்டெக் நிறுவனத்திற்கு வேலை செய்து வந்தார். அந்த நிறுவனம் பைபிட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின்னிலக்க நாணயங்களாக வழங்கும் சேவையை செய்துவந்தது.

அப்போது ஹோ, வீசெயின் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் ஏமாற்று வேலை செய்து மின்னிலக்க நாணயங்களை வேறு கணக்குகளுக்கு அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தேகத்திற்குரிய வகையில் மின்னிலக்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதை பைபிட் நிறுவனம் கண்டுபிடித்தது.

அதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையில் புகார் கொடுத்தது. 2022ஆம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் மின்னிலக்க நாணயங்கள் ஹோவின் கணக்குகளுக்கு அனுமதி இல்லாமல் மாற்றப்பட்டதையும் நிறுவனம் குறிப்பிட்டது.

அதன் பின்னர் காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின்போது ஹோவிடம் பல ஆடம்பரப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹோ மீதான மோசடி தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்