முட்டையால் தாக்கப்படுவதுபோல் நாடகமாடிய சிங்கப்பூரருக்கு, தைவான் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிநுழைவுப் பிரிவு பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.
‘கியெராகிட்டி’ என்ற பெயரில் இயங்கிவந்த சமூக ஊடகப் பிரபலம் திருவாட்டி செங் விங் யீ, தைவானின் கவொசியொங் நகரில் நேரலையாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒருவர் முட்டைகளை எறிந்த சம்பவம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடந்தது.
திருவாட்டி செங் தன் கணவரை மயக்கியதாக ‘தாக்குதல் நடத்தியவர்’ மாண்டரின் மொழியில் கத்தினார்.
பெரியவர்க்கான கருப்பொருளில் தனது படைப்புகள் இருப்பதால் தாக்குதலுக்குத் தான் ஆளானதாக திருவாட்டி செங் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர் யார் என்று தனக்குத் தெரியாது என்றும் காவலர்களிடம் இதுகுறித்து புகார் அளிக்கவுள்ளேன் என்றும் அவர் பிப்ரவரி 10ஆம் தேதியன்று தைவானிய செய்தியாளர்களிடம் சொன்னார்.
இருப்பினும், அத்தகைய புகார் ஏதும் செய்யப்படவில்லை என்று கவொசியொங் காவல்துறையினர் தெளிவுபடுத்தினர்.
பின்னர், ‘தாக்குதல்காரர்’ திருவாட்டி செங்கின் உதவியாளர் என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த உதவியாளர் ‘ஸுவெ’ என்ற பெயர் கொண்ட 32 வயது சிங்கப்பூரர் ஆடவர் என்று ‘தைப்பே டைம்ஸ்’ தெரிவித்தது.
நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் பொய்ச் செய்தி பரப்பியதன் தொடர்பில் இருவரின் வழக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கவொசியொங் காவல்துறையிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, பிப்ரவரி 24ஆம் தேதியன்று தாக்குதல் சம்பவம் வெறும் நாடகமே என்று கண்ணீர் மல்க நேரலையாகப் பேசினார் திருவாட்டி செங்.

