சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாட்டின் வளர்ச்சி அவசியம்: துணைப் பிரதமர் வோங்

சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாட்டின் வளர்ச்சி அவசியம்: துணைப் பிரதமர் வோங்

2 mins read
a9394593-77d9-4e9a-b90a-1c2b05d71122
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் 2024 மீதான மூன்று நாள் விவாதத்தை முடித்து வைத்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூர் தனது பொருளியல் வளர்ச்சியைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

பொருளியல் வளர்ச்சி இருந்தால்தான், உலகம் அதிக ஆபத்தானதாகவும் கணிக்க முடியாத ஒன்றாகவும் மாறும்போது சிங்கப்பூர் தனது சொந்த மக்களுக்கு வாழ்க்கையையும் கவனிப்பையும் நல்லமுறையில் தரமுடியும் என்றார் அவர்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முதல் 3 விழுக்காடு வரையிலான வளர்ச்சியை எட்ட அரசாங்கம் வகுத்திருக்கும் திட்டம் குறித்து மன்றத்தில் அவர் விளக்கினார்.

“வளங்கொழிக்கும் கத்தார் அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைப் போல நம்மிடம் போதுமான நிலப்பரப்போ இயற்கைவளமோ இல்லாததால் சிங்கப்பூர் எப்போதும் ஒரு சிறிய சிவப்புப் புள்ளியாகவே இருக்கும் என்பதே உண்மை.

“நாம் நமது நிலையிலிருந்து தடுமாறினால், நம்மைக் காப்பாற்ற யாரும் முன்வரமாட்டார்கள்.

“அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகச் செலவினங்களுக்கான தொகையை நான்கு மடங்கு அதிகப்படுத்தி உள்ளது

“சிங்கப்பூரர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவ வளர்ச்சியைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியம் இருக்கிறது,” என்றார் திரு வோங்.

கடந்த பல ஆண்டுகளில் சமூக ஆதரவை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் உருவாக்கப்பட்ட விதத்தை அவர் விளக்கினார்.

நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்த $131.4 பில்லியன் அரசாங்கச் செலவினத் திட்டம் மீதான மூன்று நாள் விவாதத்தின் நிறைவில் திரு வோங் பேசினார்.

அந்த விவாதத்தின்போது 61 உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர்.

விவாதங்களை முடித்து வைத்து ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசினார் நிதி அமைச்சுருமான திரு வோங்.

“வர்த்தக நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்யலாம், எங்கே தொழில்தளத்தை அமைக்கலாம் என்பதில் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும்.

“இங்கு தொடர்ந்து இருப்பதற்காக சிறந்த நிறுவனங்கள் செலவிட்டு வருவதை நியாயப்படுத்த சிங்கப்பூர் தனது போட்டித்தன்மையைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு நிறுவனம் காலூன்றி, தழைத்தோங்குவதற்கு ஜெர்மானியப் பன்னாட்டு நிறுவனமான சீமென்சை அவர் உதாரணமாகச் சுட்டினார்.

1908ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த அந்நிறுவனம், சிறிய விற்பனை அலுவலகத்தில் தொடங்கி, காலப்போக்கில் போக்குவரத்து, நீர்ச் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான தொழில்நுட்பங்களை வழங்கக்கூடியதாக வளர்ந்தது என்று திரு வோங் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்