$1.2 மில்லியன் பறித்த மோசடி நிதி மீட்புச் சேவைகள்

2 mins read
31bb11bc-57af-4a31-9d6e-ae4e91867038
சட்ட நிறுவனங்கள் அல்லது நிதிச் சேவை நிறுவனங்களைப் போல் பாசாங்கு செய்து தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வதாகத் தெரிவக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து மோசடி நிதி மீட்புச் சேவைகளால் சிலர் பாதிக்கப்பட்டு $1.2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர்

இந்த மோசடி குறித்து குறைந்தது 29 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 29ஆம் தேதியன்று காவல்துறை தெரிவித்தது.

சட்ட நிறுவனங்கள் அல்லது நிதிச் சேவை நிறுவனங்களைப் போல் பாசாங்கு செய்து தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வதாகத் தெரிவக்கப்பட்டது.

மோசடி, தவறான முதலீடுகள் ஆகியவை மூலம் இழந்த பணத்தை மீட்க உதவுவதாக அவர்கள் உறுதி அளித்து நம்பவைப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய ‘சேவை’களுக்கான விளம்பரங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பார்த்ததாகப் பாதிக்கப்பட்டோரில் சிலர் தெரிவித்தனர்.

விளம்பரங்களைப் பார்த்து, அவற்றை நம்பி விளம்பரம் செய்தவர்களைத் தொடர்புகொண்டதாக அவர்கள் கூறினர்.

இழந்த பணத்தை மீட்டுத் தர உதவுவதற்கு முன்பு, நிர்வாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான பணத்தைச் செலுத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிவைத்தல், மின்நாணயம் ஆகியவை மூலம் பணம் செலுத்துமாறு அவர்களை நம்பி அழைத்தவர்களிடம் மோசடிக்காரர்கள் கூறியதாகத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிலர் மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி, தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், கடன் அட்டை விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.

தொலைதூரத்திலிருந்து மின்சாதனங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர உதவும் ‘எனிடெஸ்க்’ போன்ற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யுமாறு சிலரிடம் மோசடிக்காரர்கள் கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது.

அவ்வாறு செய்தவர்களின் கைபேசி போன்ற மின்சாதனங்களை அந்த மோசடிக்காரர்களால் ஊடுறுவி பயன்படுத்த முடிந்தது. அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்ய முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சொன்னபடி பணம் மீட்கப்படாததை அடுத்து, மோசடிக்காரர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர்.

அத்துடன் மோசடிக்காரர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனதாகவும் அவர்கள் கூறினர்.

மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் சிக்காதிருக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தங்களுடன் தொடர்புகொள்பவர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டாலலோ இத்தகைய மோசடிகள் குறித்து தகவல் கிடைத்தாலோ 1800-225-0000 எனும் எண்ணுடன் காவல்துறையுடன் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்