ஓசிபிசி வங்கியின் நூற்றுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 2021, 2022ஆம் ஆண்டுகளில் மோசடி செய்யப்பட்டனர். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட 12.8 மில்லியன் வெள்ளி இழக்க நேரிட்டது.
இந்த குற்றத்தில் தொடர்புடைய 21 வயது ஜோவன் சோ ஜுன் யானுக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையில் ஜோவன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஜோவனும் அவரது கூட்டாளிகளும் இணைந்து 16 வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை அடையாளம் தெரியாத வெளிநாட்டு மோசடி கும்பலிடம் டெலிகிராம் செயலி வழி கொடுத்துள்ளனர்.
கிடைத்த வங்கி கணக்குகளில் மோசடியாளர்கள் பரிவர்த்தனை செய்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றினர்.
எட்டுப் பேர் கொண்ட ஜோவனின் குழு கிட்டத்தட்ட 600,000 வெள்ளி மோசடி செய்ய உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜோவனின் குழுவில் இருந்த லியோங் ஜுன் சியன், முகம்மது கைரூதின் ஆகியோரும் இதற்கு முன்னர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 19 வரை 768 ஒசிபிசி வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜோவனின் குழு சிக்கியது.
மோசடி தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
மோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் தொகை முழுவதையும் ஓசிபிசி வங்கி 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கியது.
வாடிக்கையாளர்கள் மோசடியாளர்களிடம் ஏமாறாமல் இருக்க வங்கியும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.