தமிழ் முரசு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் த.ராஜசேகர்

தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராக 61 வயது த.ராஜசேகர் ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றும் திரு ராஜசேகர், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

எஸ்பிஎச் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைத்துவப் புதுப்பிப்பின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முரசின் தற்போதைய ஆசிரியரான திரு ஜவஹரிலால் ராஜேந்திரன், 66, ஏப்ரல் 1 முதல் ஆலோசனை ஆசிரியராகச் செயல்படுவார். அத்துடன், சிறப்புத் திட்டப் பணிகளையும் அவர் கவனித்துக்கொள்வார்.

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ் முரசின் துணை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய திரு ராஜேந்திரன், 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் முரசின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, கடந்த 13 ஆண்டுகளாக இந்நாளிதழை வழிநடத்தி வந்தார். 2008ஆம் ஆண்டு தப்லா! இதழைத் தொடங்கினார்.

“தமிழ் முரசு ஆசிரியராகப் பணியாற்றியதில் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளேன். பல ஆண்டுகளாக எனக்கு அளவில்லா உதவியையும் ஆதரவையும் தந்த அனைத்து சக ஊழியர்களுக்கும் என் நன்றி,” என்று கூறினார் திரு ராஜேந்திரன்.

ஊடகத்துறையில் 43 ஆண்டுகால அனுபவமுள்ள அவர், 1981ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் செய்தியாளராகப் பணியைத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டு ‘த நியூ பேப்பர்’ இதழில் இணைந்து, வெவ்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தமிழ் முரசு லிமிடெட் என அன்றைய சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயல்பட்ட தமிழ் முரசு, 2017ஆம் ஆண்டு எஸ்பிஎச்சின் ஆங்கில/மலாய்/தமிழ் ஊடகக் குழுவின் ஓர் அங்கமாக்கப்பட்டது அவரது தலைமைத்துவ காலத்தில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று. ஜென்டிங் லேனில் அப்போது செயல்பட்டுவந்த தமிழ் முரசு, தோ பாயோ நார்த்தில் உள்ள ‘எஸ்பிஎச் நியூஸ் சென்டர்’ வளாகத்திற்கு இடமாறியது.

அண்மையில் அறிமுகம் கண்ட தமிழ் முரசு செயலி உட்பட, திரு ராஜேந்திரனின் தலைமைத்துவத்தின்கீழ் தமிழ் முரசு, மின்னிலக்கத் தளத்தில் பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டது.

கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் முரசுக்கும் அதன் மின்னிலக்க உருமாற்றத்திற்கும் திரு ராஜேந்திரன் ஆற்றிய பங்களிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி நல்கினார் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் ஆங்கில/மலாய்/தமிழ் ஊடகக் குழுத் தலைமை ஆசிரியர் திரு வோங் வெய் கோங்.

“சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழ் என்ற வகையில் தமிழ் முரசு சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் முக்கியக் குரலாக விளங்குகிறது. சமூகத்துக்குச் செய்திகளை வழங்குவதுடன் சமூகத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது,” என்றும் தமிழ் முரசின் பணிகளை அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முரசின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கவும் இளம் வாசகர்களை ஈர்க்கவும் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கவுள்ள திரு ராஜசேகரின் வலுவான சமூகத் தொடர்புகளும் அனுபவமும் கைகொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு பள்ளி, தனியார் கல்வி நிறுவனம், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி எனப் பல கல்வி நிறுவனங்களில் பொருளியல் துறை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் திரு ராஜசேகர்.

மீடியாகார்ப் நிறுவனத்தில் உதவி துணைத் தலைவராகச் சேர்ந்து அன்றைய வசந்தம் சென்ட்ரல் ஒளிவழியைத் தொடங்கியவர்களில் அவரும் ஒருவர். பின்னர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் தற்காப்பு அமைச்சிலும் கல்வி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் சிண்டாவில் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் டிசம்பர் 2009ஆம் ஆண்டு முதல் ஜூன் 2014ஆம் ஆண்டுவரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயலாற்றினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உத்திபூர்வத் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவின் இயக்குநராகப் பணிபுரிந்த அவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

“தமிழ் முரசில் சேர்ந்து சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்துக்குச் சேவையாற்றுவது எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் வாய்ப்பும் வரமும்கூட. எனது முந்தைய வேலைகளில் பெற்ற அனுபவமும் சமூகத்தினர் மத்தியில் பேணி வரும் நட்புறவும் தமிழ் முரசை அனைத்து ஊடகத் தளங்களிலும் மேம்படுத்தக் கைகொடுக்கும்,” என்று திரு ராஜசேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!