இணைய வர்த்தக மோசடிகளை எதிர்த்துப் போராட உள்துறை அமைச்சுடன் இணைந்து மெட்டா நிறுவனம் மறுத்து வருவதாக உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்து உள்ளார்.
மோசடிகளுக்கு எதிராக அரசாங்க அமைப்புகளுடன் பல்வேறு இணையத்தளங்கள் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் மெட்டா மட்டும் தனது தளத்தில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க தொடர்ந்து மறுத்து வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
மெட்டா நிர்வகிக்கும் ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் என்னும் ஒரே ஒரு தளம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தாத தளம் என்று அமைச்சின் பாதுகாப்புத் தரப்பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றார் அவர்.
ஃபேஸ்புக்கில் இணைய வர்த்தக மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளைச் சேர்க்க உள்துறை அமைச்சு அளித்த பரிந்துரைகளை மெட்டா தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
அரசாங்கம் வழங்கிய அடையாளத்தின் அடிப்படையில் பயனாளர்களைச் சரிபார்க்க வேண்டும் என்பதும் மார்க்கெட்பிளேஸ் பயனாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தும் தெரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதும் அமைச்சின் பரிந்துரைகள் என்று அவர் விளக்கினார்.
மெட்டா நிறுவனம் நடத்தும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றவை மோசடிக்காரர்கள் தங்களது மோசடிச் செயலுக்காகப் பயன்படுத்தும் முக்கிய தளங்களில் குறிப்பிடத்தக்கவை என்றார் திருவாட்டி சுன்.