லண்டன்: உலக சுகாதார நிறுவன மற்றும் அனைத்துலக ஆய்வுக் குழுவினரின் ஆக அண்மைய தரவுகளின்படி உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடல் பருமனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பலவித கடும் நோய் அபாயங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
உலகில் தற்பொழுது எடை குறைவாக உள்ளவர்களைவிட உடல் பருமனாக உள்ளவர்களே அதிகமாகக் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்த நிலைமை முன்னர் ஊட்டச்சத்து உணவில்லாமல் தவித்த குறைந்த வருமான, மத்திம வருமான நிலையிலுள்ள நாடுகளிலும் காணப்படுவதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
“அதிர்ச்சியுறும் அளவிலான மக்கள் பருமனாக உள்ளனர்,” என்று லண்டனின் இம்பீரியல் காலேஜ் பேராசிரியர் மஜித் எஸாட்டி பிப்ரவரி 29ஆம் தேதி வெளியான லான்செட் என்ற சஞ்சிகையில் வெளியான தமது ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளார்.
சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மிகவும் நம்பகமான ஆய்வு என்று கூறப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் 190 நாடுகளில், 220 மில்லியன் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வளமான நாடுகள் பலவற்றில் பருமனாக உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டுப்படும் வேளையில் மற்ற நாடுகளில் அது அதிகரித்து வருவதாக பேராசிரியர் எஸாட்டி சுட்டிக்காட்டுகிறார்.
எடை குறைவாக உள்ளவர்கள் எண்ணிக்கை பல நாடுகளில் முன்னைவிட குறைவாகக் காணப்படுகிறது என்றாலும் அது இன்னமும் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் பல நாடுகளில் முறையான ஊட்டச்சத்து இல்லாமல், இரட்டிப்புச் சுமையாக இந்தப் பிரச்சினை விளங்குகிறது என்றும் ஆய்வு சுட்டுகிறது.
“முன்னொரு காலத்தில் உடற் பருமன் வசதியானவர்களின் பிரச்சினை என்று நாம் கருதி வந்தோம். ஆனால், அது உலகப் பிரச்சினை,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்துப் பிரிவின் தலைவரான ஃபிரான்செஸ்கோ பிராங்கா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

