தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$207,000க்கும் அதிகமான கையூட்டு வழங்கிய ஆடவருக்கு ஆறு மாதச் சிறை

2 mins read
fde600f9-8e63-4ad5-8b09-e7c99d077885
52 வயதான ஜோசப் ஆங் கோக் லெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஒரு புதுப்பிப்புத் திட்டத்தைப் பெறுவதற்காக இருவருக்கு $207,000க்கும் அதிகமான கையூட்டு வழங்கியதற்காகவும் கட்டட, கட்டுமான ஆணையத்தை ஏமாற்றியதற்காகவும் ஜோசப் ஆங் கோக் லெங் என்பவருக்கு பிப்ரவரி 29ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட கையூட்டு வழங்கிய குற்றச்சாட்டையும் மோசடி குற்றச்சாட்டையும் 52 வயதான ஆங் ஒப்புக்கொண்டார்.

இங், உட்புற வடிவமைப்பு நிறுவனமான லின் ஐடி குழுமத்திலும் கட்டுமான நிறுவனமான லின் பில்டர்சிலும் மேலாளராகப் பணிப்புரிந்தார்.

அப்போது அவர், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திட்டதைப் பெறக் கையூட்டாகத் தரப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைத் தனித்தனியாக ஆறு தவணைகளில் இருவருக்குத் தந்தார்.

இது மட்டுமன்றி, 2020ஆம் ஆண்டு வேறு இருவருடன் இணைந்து கட்டட, கட்டுமான ஆணையத்தை ஏமாற்றினார்.

‘லின் பில்டர்ஸ்’ நிறுவனம் அதிக மதிப்புள்ள திட்டங்களை ஏலம் எடுக்க கட்டட, கட்டுமான ஆணையம் அனுமதி அளிக்கும் வகையில் தவறான ஆவணங்களைத் தயார் செய்து அதை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் மோசடித் திட்டத்திற்கு அவர் உடந்தையாக இருந்தார்.

கையூட்டு வழங்கிய வழக்கில் அதைப் பெற்ற உட்புற வடிவமைப்பாளராகத் தன்னிச்சையாகத் தொழில் புரியும் 38 வயதான ரெக்ஸ் ஸாங் ஜியாஹாவுக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனையும் முன்னாள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியரான 36 வயதான லயனல் லோ ஜுன் ஜியேவுக்குப் பத்து மாதச் சிறைத் தண்டனையும் முன்னரே விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிற்கு $15,000 பிணைத்தொகையாக அறிவிக்கப்பட்டது. மேலும், தன் தண்டனையை அனுபவிக்க வரும் மார்ச் 28 ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்