கடல்சார் பொறியியல் துறையில் வெளிநாட்டினர் ஒதுக்கீடு கடுமையாகிறது

கடல்சார் பொறியியல் துறையில் வெளிநாட்டினர் ஒதுக்கீடு கடுமையாகிறது

2 mins read
dbdd5bbc-c326-423e-8d56-f3935c8c3f6e
கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு $100 மில்லியன் மதிப்பிலான புதிய ஆதரவுத் தொகுப்பை பெற உள்ளது. - கோப்புப் படம்: பிக்சபே

கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறை வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உற்பத்தித்திறனைப் பெருக்கவும் திட்டமிடுகிறது.

அந்தத் துறையின் சார்ந்திருப்பு விகித வரம்பு குறைக்கப்படும் அதேவேளையில் அந்தத் துறையின் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை 2026ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

சார்ந்திருப்பு விகித வரம்பு என்பது, ஒவ்வொரு நிறுவனத்திற்குமான எஸ் பாஸ் மற்றும் ஒர்க் பெர்மிட் ஊழியர் எண்ணிக்கையின் அதிகபட்ச அளவைக் குறிக்கிறது.

இந்த வரம்பு இனி 75 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும். அதாவது, மூன்று உள்ளூர் ஊழியர்களுக்கு ஒரு எஸ்-பாஸ் அல்லது ஒர்க் பெர்மிட் ஊழியர் என்ற விகிதத்துக்கு மாற்றப்படும். தற்போது அந்த விகிதம் 77.8 விழுக்காடாக உள்ளது. அதாவது, 3.5 உள்ளூர் ஊழியர்களுக்கு ஒரு வெளிநாட்டு ஊழியர் என்பது தற்போதைய நிலை.

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தமது அமைச்சுக்கான செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது மாற்றங்களை அறிவித்தார்.

அவர் தமது உரையில், “மேலும் சில மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் துறை சந்திக்கும் முன்னேற்றங்களைக் கண்காணிப்போம்,” என்றார்.

கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறையின் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை உயர்த்தப்படும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆயினும், துறையில் நிலவிய மந்தம், அதற்குப் பின்னர் பரவிய கொவிட்-19 பெருந்தொற்று ஆகியன காரணமாக தீர்வையை உயர்த்துவது தள்ளிப்போடப்பட்டது.

தற்போது, திட்டமிட்டபடி அதனை நிறைவேற்ற இருப்பதாகவும் மனிதவள அமைச்சின் செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது இதுபற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கான் கூறினார்.

“செயல்படும் முறையை மறுபரிசீலனை செய்யவும் உயர்திறன் மற்றும் உயர் மதிப்பு செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளிநாட்டு மனிதவளச் சார்ந்திருப்பைக் குறைக்க துறையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை இந்தப் புதிய நடவடிக்கைகள்.

“உருமாற்றம் என்பது அவசியம் என்றாலும் அதனை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல,” என்றார் அவர்.

புதிய மாற்றங்களை நிறைவேற்ற, கடல்துறை மற்றும் கடல்சார் பொறியியல் துறை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு $100 மில்லியன் மதிப்பிலான புதிய ஆதரவுத் தொகுப்பை பெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்