சிங்கப்பூர் பொருளியலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று உலக வர்த்தகத்தில் அது மையமாக விளங்குவதை உறுதிசெய்ய சிங்கப்பூர் பயணத்துறைக்கு $300 மில்லியன் முதலீடு செய்யப்படும்.
பயணத்துறை வளர்ச்சிக்கான இந்த நிதித் திட்டத்தை வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த நிதி புதிய பொருள்களை உருவாக்கி, அதை சந்தைப்படுத்துவதுடன் புதிய அனுபவங்களை ஏற்படுத்தவும் உதவும். மேலும், இவை உள்ளூர் வர்த்தகங்கள் புதிய அறிவுசார் பொருள்களை உருவாக்குவதற்கும் ஆதரவாக அமையும் என்று திரு டான் கூறினார்.
மேலும், இந்த நிதி பயணத்துறை ஈர்ப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதுடன் பயணத்துறையில் இருக்கும் ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கும் உதவும். அத்துடன், இது பயணத்துறை நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் புத்தாக்கத்தில் ஈடுபடவும் உதவும் என்றார் அமைச்சர் டான்.
பயணத்துறை வளர்ச்சி நிதி முக்கியமாக நான்கு புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். அவை, ‘டிரிஃபெக்டா’ எனப்படும் உலகிலேயே முதன்முதலில் ஒருங்கே அமையவிருக்கும் ஆர்ச்சர்ட் ரோடின் மையப் பகுதியில் அறிமுகம் காணும் பனி விளையாட்டு, அலையாடல், சறுக்கு விளையாட்டு ஆகியவை. இவற்றுடன், டிஸ்னி அட்வென்சர் உல்லாசக் கப்பல் பயணமும் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிதி பயணத்துறை தொடர்பான 100 வர்த்தகங்கள் உற்பத்தித்திறனைப் அதிகரிக்கவும் அவை நீடித்து நிலைத்திருப்பதற்கும் உதவி வந்துள்ளது,” என்று அமைச்சர் டான் தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது விளக்கினார்.
பயணத்துறையுடன் ஒத்துழைப்புக்கு அடையாளமாக இனி வரும் ஆண்டுகளில் உயர்தர, உலகிலேயே முதன்முதலாக பெறும் அனுபவங்களைக் கொண்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.
சுற்றுப்பயண அனுபவங்களை மேம்படுத்தவும் சில திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில், ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவையும் செந்தோசா கடற்கரைகளையும் இணைக்கும் ‘சென்சரிஸ்கேப்’ எனும் புதிய கண்கவர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. பல்லுணர்வுத் தோட்டங்களும் இரவில் மின்னிலக்க ஒளிக்கலைக் காட்சிகளும் அதில் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
இப்போதுள்ள ‘சீ அக்வேரியம்’ எனும் நீர்வாழினக் காட்சியகத்தின் நீட்சியாக, அதைப்போல் மூன்று மடங்கு அளவுடன் கூடிய பெருங்கடல் வாழினக் காட்சியகத்தை (ஓசனேரியம்) ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.
அனைத்துலகப் பயணிகளின் வருகை மீட்சியடைந்துவரும் நிலையில், இத்தகைய திட்டங்கள் சுற்றுப்பயணத் துறையை ஊக்கப்படுத்துவதாக அமையும் எனக் கூறப்பட்டது.