மானபங்கம்: இந்தியர் இருவர் உட்பட ஐவர்மீது குற்றச்சாட்டு

மானபங்கம்: இந்தியர் இருவர் உட்பட ஐவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
b5ed2e54-576b-45f5-9ba0-4d0d1f658f14
படம்: - பிக்சாபே

மரீனா பே சாண்ட்சில் (எம்பிஎஸ்) தனித்தனி சம்பவங்களில் பிறரை மானபங்கம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள் மீது மார்ச் 1ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) குற்றஞ்சுமத்தப்பட்டது.

பெண்களை மானபங்கம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் வேறு இரு ஆடவர்களின்மீதும் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சிங்கப்பூரரான 35 வயது டெரிக் பே சின் கியாட், இவ்வாண்டு ஜனவரி1ஆம் தேதி எம்பிஎஸ்சில் இருக்கும் ‘மார்க்கீ’ இரவு விடுதியில் 32 வயதான மாது ஒருவரின் பின்புறத்தை அழுத்தியதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ‘மார்க்கீ’ இரவு விடுதியில் அதிகாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 31 வயது ரயன் சார்லஸ் டங்கன், 31 வயதான ஆடவர் ஒருவரின் பின்புறத்தை இரண்டு முறை தொட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

டங்கன்மீது இரு மானபங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

‘எம்பிஎஸ்’ சூதாட்டக்கூடத்திற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி காலை 5 மணியளவில் 38 வயது மாது ஒருவரை இந்திய நாட்டவரான 49 வயது மேர்லா ராமகிருஷ்ணா மதுசூதன் மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது.

இவ்வாண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சைனாடவுன் கடைத் தெருவில் 44 வயதான ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக மற்றோர் இந்திய நாட்டவரான 33 வயது கண்ணன் கோவிந்தராஜி மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.

சிங்கப்பூரரான 63 வயது லிம் வை சின் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பெக் கியோ பகுதியில் பேருந்தில் 28 வயதான பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

லிம், டங்கன், கண்ணன் ஆகிய மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்