அரசாங்கச் சொத்துகளில் இருந்து சிங்கப்பூர் நில ஆணையம் வசூல் செய்த வருவாய். அந்தச் சொத்துகளை நிர்வகிக்கச் செலவிடப்பட்ட தொகையைக் கணிசமாக மிஞ்சியிருப்பதாக சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய வினாக்களுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
பழைய பங்களாக்கள் உட்பட சிங்கப்பூர் நில ஆணையம் நிர்வகிக்கும் அரசாங்கச் சொத்துகளின் விவரத்தை திரு லியோங் கேட்டிருந்தார்.
அரசாங்கச் சொத்துகளில் காலியாக இருப்பவை எத்தனை, எவ்வளவு காலமாக அவை காலியாக இருந்தன என்பவை தொடர்பான கூடுதல் விவரங்களையும் அவர் கேட்டிருந்தார்.
குறிப்பாக, 26 ரிடவுட் ரோடு பழைய பங்களா வாடகைக்கு விடுவதற்கு முன்னர் நாலாண்டு காலம் மிக மோசமான நிலைமையில் இருந்ததாக திரு லியோங் கூறினார்.
ரிடவுட் ரோட்டில் உள்ள 26 மற்றும் 31 எண் கொண்ட அரசாங்க பங்களாக்களை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகத்திற்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும் வாடகைக்கு விட்டது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

