தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் கோம்பாக், தெம்பனிஸ் வெஸ்ட் நகர மையங்கள் புதுப்பொலிவு காணும்

2 mins read
f9090f18-529c-432e-b345-48825d0e0b9a
உருமாற இருக்கும் புக்கிட் கோம்பாக் அக்கம்பக்க நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் கோம்பாக் மற்றும் தெம்பனிஸ் வெஸ்ட் நகர மையங்களைப் பொலிவூட்டும் திட்டம் அறிமுகம் காண உள்ளது.

குடியிருப்பு வட்டார நிறுவனங்கள் புத்தாக்கம் பெறவும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதி அந்தத் திட்டம்.

அதன் அடிப்படையில், புதிய குடியிருப்பு வட்டார நிறுவன மேம்பாட்டு மானியம் ஒன்றும் தொடங்கப்படும்.

சமூக ஈடுபாட்டு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் போன்றவற்றை குடியிருப்பு வட்டாரக் கடைகள் ஏற்று நடத்த அந்த மானியம் ஊக்குவிக்கும்.

வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சில்லறை வர்த்தகத் துறை வேகமான வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் புதிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

தொழில்நுட்பம், இணைய வர்த்தகம் ஆகியவற்றுடன் பயனீட்டாளர்களின் தேர்ந்தெடுப்பு விருப்பங்களும் ஏற்றம் கண்டதால் சில்லறை வர்த்தகத் துறை விரைவான வளர்ச்சியை எட்டியது என்று திருவாட்டி லோ தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தெரிவித்தார்.

சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகத் துறையுடன் குடியிருப்பு வட்டார வர்த்தகங்களுக்கும் ஆதரவு அளிக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பொலிவூட்டும் முன்னோடித் திட்டங்களின்கீழ், புக்கிட் கோம்பாக் அக்கம்பக்க நிலையம் நவீன மரபுடைமை குடியிருப்பு வட்டார மையமாக உருமாறும்.

அதேபோல, தெம்பனிஸ் வெஸ்ட் அக்கம்பக்க நிலையம் நகர்ப்புற நிகழ்வு மையமாக மாறும் என்றார் திருவாட்டி லோ.

ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் ஷான் ஹுவாங், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபூ மீ ஹார், பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு திருவாட்டி லோ பதிலளித்துப் பேசினார்.

நமது குடியிருப்பு வட்டாரத் திட்டம் 2025 தொடர்பில் மேல்விவரங்களை அளிக்குமாறு அவர்கள் கேட்டிருந்தனர். இந்தத் திட்டம் 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்