கிளவுட் சேவைகளையும் தரவு மையங்களையும் நடத்தும் நிறுவனங்களில் தடங்கல்கள் ஏற்படும்போது மின்னிலக்கச் சேவைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகம் செய்கிறது.
தடங்கல்கள் மூலம் மின்னிலக்கச் சேவைகளின் உள்கட்டமைப்புச் செயலிழந்தால் சிங்கப்பூரின் பொருளியலிலும் சமூகத்திலும் அது இடையூற்றை ஏற்படுத்திவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
சேவைத் தடங்கல்களுக்கு கிளவுட் சேவைகள் மற்றும் தரவு மையங்களை நடத்தும் நிறுவனங்கள் கூடுதல் பொறுப்பேற்க புதிய சட்டம் வழிவகை செய்யும்.
அந்த மின்னிலக்க உள்கட்டமைப்புச் சட்டம், அண்மையில் வங்கிகளிலும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகளிலும் நிகழ்ந்த சேவைத் தடங்கல்களைத் தொடர்ந்து அறிமுகம் காண்கிறது.
அதுபோன்ற தடங்கல்கள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.
மின்னிலக்க உள்கட்டமைப்பில் இடையூறு ஏற்பட்டால் பொருளியலிலும் சமூகத்திலும் அதனால் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க பாதிப்புகள் மீது புதிய சட்டம் கவனம் செலுத்தும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மின்னிலக்கச் சேவைகளில் பெரும்பாலானவை கிளவுட் சேவைகளையும் தரவு மையங்களையும் சேர்ந்த நிறுவனங்கள் நடத்தக்கூடியவை என்றார் அவர்.
இணைய வங்கி மற்றும் அதன்வழி பணம் அனுப்புதல், அரசாங்க இணையச் சேவைகள், மின்னிலக்க அடையாளங்களைக் கையாள்வது போன்றை உள்ளிட்ட மின்னிலக்கச் சேவைகள் அவை.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய நிறுவனங்கள் இடையூறு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும் மீள்திறன் தரநிலையையும் உயர்மட்ட பாதுகாப்பையும் கொண்டிருப்பது அவசியம்,” என்று தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திருவாட்டி டியோ தெரிவித்தார்.
2023 அக்டோபர் 14ஆம் தேதி டிபிஎஸ் மற்றும் சிட்டிபேங்க் வாடிக்கையாளர்கள் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் அனுப்பும் சேவைகளையும் தானியக்க வங்கி இயந்திர (ஏடிஎம்) பரிவர்த்தனைகளையும் செய்ய இயலாமல் போனது.
அந்த இரண்டு வங்கிகளும் பயன்படுத்தும் ஈக்குவினிக்ஸ் தரவு நிலையத்தில் ஏற்பட்ட கோளாற்றால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

