கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 2.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளும் பிற ஆவணங்களும் சனிக்கிழமையன்று (மார்ச் 2) அழிக்கப்பட்டன.
வாக்குகளின் ரசசியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
வாக்குச் சீட்டுகளையும் மற்ற ஆவணங்களையும் கொண்ட மூடப்பட்ட பெட்டிகள் உச்ச நீதிமன்றத்தின் பெட்டகத்திலிருந்து துவாஸ் சவுத் எரி ஆலைக்குச் சனிக்கிழமை காலை கொண்டுசெல்லப்பட்டன. அங்கு அவை அனைத்தும் எரியூட்டப்பட்டன.
தேர்தல் துறை அனுமதித்திருந்தபோதும் அதிபர் தர்மன் சண்முகரத்னமோ மற்ற வேட்பாளர்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ அந்த இடத்திற்கு வரவில்லை.
மும்முனைப் போட்டியாக நடந்த 2023 அதிபர் தேர்தல் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

