முன்னாள் ஆசிரியரும் ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தலைமை ஆசிரியருமான இயூஜின் விஜயசிங்க தமது 90 வயதில் சனிக்கிழமை (மார்ச் 2) அன்று காலமானார்.
அவரது மறைவை ராஃபிள்ஸ் கல்வி நிலையம் தனது ஃபேஸ்புக் பதிவில் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
திரு இயூஜின் விஜயசிங்கவை தொலைநோக்கு சிந்தனையுடையவர் என்று ராஃபிள்ஸ் கல்வி நிலையம் கூறியுள்ளது.
“அவர் மக்களின் மதிக்கும் மனிதராக நினைவுகூரப்படுகிறார். அவர் விட்டுச் சென்றுள்ள மரபுரிமைப் பண்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அவரின் தலைமைத்துவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவரை எதிர்த்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது,“ என்று ராஃபிள்ஸ் கல்வி நிலையம் அவருக்கு புகழாரம் சூட்டியது.
“அன்னாரது குடும்பம், அன்புக்குரியவர்களுக்கு எங்களது ஆழ்ந்த, மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று ராஃபிள்ஸ் கல்வி நிலையம் பதிவிட்டுள்ளது.
திரு விஜய் என அன்பார்ந்த முறையில் அழைக்கப்பட்டு வந்த விஜயசிங்க 1959ஆம் ஆண்டு சரித்திர பாட ஆசிரியராக முன்னர் பிராஸ் பசா சாலையில் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் தொடங்கினார். பின்னர் அவர் மூத்த ஆசிரியராக பொறுப்பேற்றார் என்று ராஃபிள்ஸ் கல்வி நிலையம் கூறுகிறது.
பின்னர் அவர் தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் தலைமை ஆசிரியராக 1980லிருந்து 1985வரை பணியாற்றிவிட்டு மீண்டும் 1986ல் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்திற்கே தலைமை ஆசிரியராகத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தை சுயேச்சைப் பள்ளியாக மாற்றிய பெருமை திரு விஜயசிங்கவுக்கு உண்டு. பின்னர் கிரேஞ்ச் ரோடில் இருந்த அந்தப் பள்ளியை பீஷானுக்குக் கொண்டுசென்று, 1994ஆம் ஆண்டு மாணவர்கள் அங்கு தங்கி கல்வி கற்க வசதியாக தங்குவிடுதித் திட்டத்தை ஏற்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு விஜயசிங்க 1994ஆம் ஆண்டு இறுதியில் ஓய்வுபெற்றார். அவர் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரிடையே நீங்கா நினைவுகளை விட்டுச் சென்றார்.

