தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளியின் பணத்தை சுருட்டியதாதிக்கு 32 வாரம் சிறைத் தண்டனை

2 mins read
49df434e-5b81-4437-8eb5-28c158a61260
prison, prison cell, jail - Pixabay - Ichigo121212

அறுவை சிகிச்சை செய்துகொள்ள வந்த நோயாளிகளின் பணத்தை சுருட்டிய தாதிக்கு திங்கட்கிழமை அன்று ( மார்ச் 4) 32 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றிய முஹமட் இலியாஸ் முஹமட் நூர், 23, தான் பிடிபட்டதற்கு நீதிமன்றத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல் உட்பட தன் மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் மீதான இதர 14 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

குறைந்தது நான்கு நோயாளிகளிடமிருந்து அவர் பணத்தை திருடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு வரும்போது அவர்களுடைய வங்கி அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைபேசிகளைக் கொண்டு இலியாஸ் தனது கைபேசியில் உள்ள மின்னிலக்க ரொக்கப் பையில் அவற்றின் விவரங்களை சேர்த்துக் கொள்வார்.

இதனால் எப்போது வேண்டுமானாலும் நோயாளியின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கவோ பணத்தை எடுக்கவோ முடியும்.

2022ஆம் ஆண்டு செப்டம்பரில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு வந்த 69 வயது நோயாளியிடம் அவர் முதலில் கைவரிசை காட்டியுள்ளார்.

நோயாளி அறுவை சிகிச்சைக்கு சென்ற பின் அவர்களுடைய பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘பிஓஎஸ்பி’ வங்கி பற்று அட்டை மற்றும் கைபேசியைத் திருடி கைபேசியில் வரும் ஒரு முறை ரகசிய எண்ணைக் கண்டறிந்து விவரங்களை தனது மின்னிலக்க ரொக்கப் பையிலும் கூகல் பிளே ஸ்டோரிலும் இலியாஸ் சேர்த்துக் கொண்டார்.

இலியாஸ் அப்படி இணைக்கப்பட்ட வங்கி அட்டையை வைத்து இஸி-லிங்க் அட்டையை நிரப்பவும் அன்றாடச் செலவு மற்றும் உணவுகளுக்கும் பயன்படுத்தினார்.

தனக்குத் தெரியாமல் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை அறிந்த நோயாளி ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததால் நூரின் கைவரிசை தெரிய வந்தது.

இதே முறையைப் பயன்படுத்தி பல நோயாளிகளின் வங்கியிலிருந்து அவர் பணம் எடுத்துள்ளார்.

இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பங்ளாதேஷ் நோயாளி ஒருவர், தனது வங்கியிலிருந்து ஆயிரம் வெள்ளி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். அவர் பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது $18 மட்டுமே எஞ்சியிருந்தது.

இலியாசால் நோயாளிகளுக்கு குறைந்தது $11,623 வெள்ளி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான இயூஜின் புவா சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்