முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது ஆஸ்திரேலியப் பயணம் 16 நாள்கள் நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் திங்கட்கிழமை (மார்ச் 4) அன்று தெரிவித்தது.
தற்காப்புத் தரப்பினர் இதற்கான அவசர மனுவை அரசு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்தனர் என்று அந்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
திரு ஈஸ்வரன் தனது மகனை பல்கலைக் கழகத்தில் சேர்ப்பதற்காக அனுமதி பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவருக்கு பிப்ரவரி 16 முதல் மார்ச் 4 வரை அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மார்ச் 19 வரை அது நீட்டிக்கப்படுகிறது.
திரு ஈஸ்வரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அண்மைய மனுவுக்கு அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அவர் கடைப்பிடிக்க வேண்டிய மேம்பட்ட பிணை நிபந்தனைகளை அது விதித்துள்ளது என்றும் பேச்சாளர் தெரிவித்தார். தினமும் காணொளி மூலமாக விசாரணை அதிகாரியுடன் தொடர்புகொண்டு உடல் நலம் குறித்தும் சிங்கப்பூருக்கு மார்ச் 19ஆம் தேதி திரும்புவதில் பிரச்சினை ஏதாவது இருக்கிறதா என்பது பற்றியும் அவர் தெரிவிப்பது நிபந்தனைகளில் ஒன்று.
திரு ஈஸ்வரன் 27 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். $800,000 பிணைத் தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் திரும்பிய பிறகு மார்ச் 20ஆம் தேதி அவர் தனது பாஸ்போர்ட்டை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். முன்னாள் அமைச்சரான திரு ஈஸ்வரனுக்கு சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.