வீவக வீடுகள் அனைத்திற்கும் $300 பருவநிலைப் பற்றுச்சீட்டு

வீவக வீடுகள் அனைத்திற்கும் $300 பருவநிலைப் பற்றுச்சீட்டு

1 mins read
7e691371-9479-4041-ae7c-0067e9db01da
பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி எரிசக்தி, தண்ணீரைச் சேமிக்கும் கருவிகளை வாங்கலாம். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகள் அனைத்திற்கும் $300 பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறியுள்ளார்.

எரிசக்தி, தண்ணீரைச் சேமிக்கும் வீட்டு உபயோகக் கருவிகளை வாங்க இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மார்ச் 4ஆம் தேதி அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் திட்டம் மேம்படுத்தப்பட்டதன் ஓர் அங்கமாக இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக 2020ல், ஓரறை முதல் மூவறை வரையிலான சிறிய வீடுகளில் வசிப்போருக்கு மட்டும் இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

“தொடக்கத்திலேயே அல்லது கருவிகளை மாற்ற நேரிடும்போது, வளங்களைச் சேமிக்கும் தெரிவுகளைக் கூடுதலான குடும்பங்களுக்கு வழங்க இது உதவும்,” என்றார் டாக்டர் கோர்.

நாடாளுமன்றத்தில் தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

புதிய மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள் வீவக வீடுகளில் வசிக்கும் 1.1 மில்லியன் குடும்பங்களுக்கும் கிடைக்கும்.

இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி எரிசக்தி, தண்ணீரைச் சேமிக்கும் 10 விதமான வீட்டு உபயோகக் கருவிகளை வாங்க முடியும்.

வீவக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர், நிரந்தரவாசிக் குடும்பங்கள், ‘ரெடீம்எஸ்ஜி’ இணையப்பக்கத்தில் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்