சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தோர் ஆகியோரின் எண்ணிக்கை 44.7 விழுக்காடு அதிகரித்ததாக காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 68 மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தோர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரில் பதிவாகி இருக்கும் வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை வெறும் 15 விழுக்காடு.
இருப்பினும், கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள் ஆகியோருடன் தொடர்புடையவை.
சாலை விபத்துகளில் மாண்டோரில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் இப்பிரிவினரே.
2023ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தோர் என மொத்தம் 4,290 பேர் காயமடைந்தனர்.
அண்மைய ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசலும் சாலைகளில் வாகன ஓட்டுநர்களுக்கு இடையே பூசல்களும் அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதலாக கிட்டத்தட்ட 21,000 கார்கள் பதிவாகின.
அதே காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றின் எண்ணிக்கை 3,000க்கும் அதிகமாகக் கூடியது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படு்வதாக மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு ஆலோசகர் திரு அமான் அல்ஜுனிட் தெரிவித்தார்.
இதனால் வாகன ஓட்டுநர்கள் பொறுமையிழப்பதாகவும் அதன் காரணமாகக் கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.