சில்லறை விற்பனை ஜனவரி மாதம் 1.3 விழுக்காடு அதிகரிப்பு

1 mins read
e695fddd-42ac-4a47-be8d-9566cd095157
வாகனங்களின் விற்பனை ஜனவரியில் ஆண்டு அடிப்படையில் 37.3 விழுக்காடு உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 1.3 விழுக்காடு அதிகரித்தது எனச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை 0.5 விழுக்காடு சரிவைக் கண்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரியில் விகிதம் அதிகரித்தது.

இருப்பினும், வாகனங்களைத் தவிர மற்ற பிரிவுகளில் சில்லறை விற்பனை 2.1 விழுக்காடு குறைந்தது. டிசம்பரில் இந்த விகிதம் 2.8 விழுக்காடு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடை, காலணி, பேரங்காடிகள் போன்ற விற்பனைத் துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

வாகனங்களின் விற்பனை ஜனவரியில் ஆண்டு அடிப்படையில் 37.3 விழுக்காடு உயர்ந்தது.

ஜனவரி மாதம் பதிவான சில்லறை வர்த்தகப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 4.3 பில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டது. அவற்றில் 11.2 விழுக்காடு இணையத்தில் இடம்பெற்ற சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகளாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைவு.

டிசம்பரில் இந்த விகிதம் 12.8 விழுக்காடாகப் பதிவானது.

கணினி, தொலைத்தொடர்புப் பொருள் விற்பனையில் 47.1 விழுக்காடு இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகளாகும். அறைகலன், வீட்டுப் பொருள்களுக்கான விற்பனையில் 30.3 விழுக்காடு இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேரங்காடிகள், பெரும் பேரங்காடிகளில் வாங்கப்பட்ட பொருள்களில் 11.9 விழுக்காடு இணையம்வழி வாங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்