குளவிகள் கொட்டியதால்தான் ஆடவர் உயிரிழந்தார்: மரண விசாரணை நீதிமன்றம்

குளவிகள் கொட்டியதால்தான் ஆடவர் உயிரிழந்தார்: மரண விசாரணை நீதிமன்றம்

2 mins read
c31bcfac-3571-499d-a47c-4f5f62edc596
படம்: - பிக்சாபே

குளவிகள் கூட்டமாக பின்தொடர்ந்து கொட்டியதால் 60 வயதான ரோனி ஆங் உடலில் விஷம் ஏறி, உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக செவ்வாயன்று மரண விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.

இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி நடந்தது.

செம்பவாங்கில் இருக்கும் பூங்கா இணைப்பு பாதை வழியாக ‘காட் ஆப் வெல்த்’ சீனக்கோயிலை ஆங் மிதிவண்டியில் அன்று காலை 11.45 மணிக்கும் 11.55 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் கடந்து சென்றார்.

அப்போது, அவரைக் குளவிகள் கூட்டமாக பின்தொடர்ந்து கொட்டின. குளவிகள் கொட்டியது குறித்து ஆங் தனது மனைவிக்குக் கைப்பேசி மூலம் தெரிவித்தார்.

ஆங்கை வீட்டிற்குத் திரும்பி வருமாறு அவரது மனைவி அறிவுறுத்தினார். தன்னால் வீட்டிற்கு வர இயலாது என்றும் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் அசௌகரியமாக உணர்கிறேன் என்றும் ஆங் தனது மனைவியிடம் தெரிவித்தார்.

மருத்துவ உதவி வாகனத்தை அழைத்துவிட்டு ஆங் இருந்த இடமான புளோக் 467A ,அட்மிரல்ட்டி டிரைவுக்கு ஆங்கின் மனைவி விரைந்தார்.

அங்குச் சென்றுபார்த்த பொழுது ஆங்கின் உடல் முழுவதும் பூச்சிகள் கடித்திருப்பதை அவர் கண்டார். ஆங்கை மருத்துவ உதவி வாகனத்தில் அழைத்துகொண்டு கூ டெக் புவாட் மருத்துவமனை விரைந்தார்.

பூச்சிக் கடியால் ஆங் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் அந்தப் பூச்சிகள் எவை என்பது அப்போது அவர்களால் அறிய முடியவில்லை.

பூச்சிகளின் விஷம் ஆங்கின் உடல் முழுவதும் பரவி இருப்பதையும் இதனால், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் பாதிக்கத் தொடங்கிப் பின் மற்ற உறுப்புகளையும் அது பாதித்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதற்காக அவருக்குச் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2022ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்
தேனீஆடவர்உயிரிழப்பு