முன்னாள் போக்குவரத்து அமைச்சரான எஸ். ஈஸ்வரன் சுவாசப் பிரச்சினை காரணமாக மெல்பர்னில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) விடுவிக்கப்பட்டார்.
தனது மகனை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றதாக அறியப்படுகிறது.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் கேப்ரினி மல்வெர்ன் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் 4ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மார்ச் 19ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரு ஈஸ்வரனின் மகன் பிப்ரவரியில் பல்கலைக் கழக படிப்பைத் தொடங்கியிருப்பதாக லிங்ட்இன் பக்கத் தகவல் தெரிவிக்கிறது.
அடிலைய்ட் பல்கலைக் கழகத்தில் படித்த திரு ஈஸ்வரன், பொருளியல் துறையில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில்தான் தனது மனைவியை அவர் சந்தித்தார்.
திரு ஈஸ்வரனின் மகள் தற்போது மெல்பர்ன் நகரில் பணியாற்றி வருகிறார்.
அமைச்சராக இருந்த காலத்தில் $200,000 மதிப்புள்ள பொருள்களை சொத்து அதிபரான ஓங் பெங் செங்கிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 24 குற்றச்சாட்டுகளை திரு ஈஸ்வரன் எதிர்நோக்குகிறார். சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தவர் திரு ஓங்.