தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் தீமா விபத்து: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர்கள்; நால்வர் கைது

2 mins read
8a1e8efc-5d8f-4e4e-a709-d1fbb7e2d873
விபத்தில் நொறுங்கியப் பள்ளிப் பேருந்து. பேருந்தின் இரண்டு டயர்கள் வெளிவந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

புக்கிட் தீமா வட்டாரத்தில் அண்ணாமலை அவென்யூவில் உள்ள ராயல்கிரீன் கூட்டுரிமைக் குடியிருப்புக்கு வெளியே மார்ச் மாதம் 6ஆம் தேதி காலை மிக மோசமான சாலை விபத்து நிகழ்ந்தது.

இதில் பள்ளிப் பேருந்தும் காரும் விபத்துக்குள்ளாகின.

விபத்து நிகழ்ந்தபோது அந்த காரில் நால்வர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்ததை அடுத்து, அந்த கார் தீப்பற்றி எரிந்தது.

காருக்குள் இருந்த 32 வயது பெண் பயணியையும் 27 வயது ஆண் பயணியையும் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

காரில் 22 வயது ஆண் பயணி ஒருவரும் இருந்தார்.

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கார் ஓட்டுநரான 26 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் கார் ஓட்டினாரா என்பதை உறுதி செய்ய நடத்தப்படும் சுவாசப் பரிசோதனையைச் செய்துகொள்ள அவர் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நால்வரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பள்ளிப் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.

விபத்தில் நொறுங்கிய பள்ளிப் பேருந்தின் முன்பக்கம் இருந்த இரண்டு டயர்கள் வெளிவந்தன.

பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த இரு மாணவர்கள் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு 8 மற்றும் 9 வயது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னொருவரின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கடும் சேதமடைந்த பள்ளிப் பேருந்தைக் காட்டும் பல காணொளிகள் டெலிகிராம் தளத்தில் பகிரப்பட்டன.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததைக் காட்டும் காணொளியும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கோப்புகள், தாள்கள், மதிய உணவு பொட்டலங்கள் ஆகியவை சாலையில் சிதறிக் கிடந்தன.

குறைந்தது இரண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டிகள் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தை மார்ச் 6 காலை 9 மணி அளவில் அடைந்தபோது விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் ‘இமாஸ்’ வாகனம், எட்டு காவல்துறை வாகனங்கள், குறைந்தது நான்கு போக்குவரத்து காவல்துறை மோட்டார் சைக்கிள்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடுமையாக நொறுங்கித் தீக்கிரையான கார் ஒன்று சாலையோரம் கிடந்ததாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சாலையோர விளக்கு ஒன்று விழுந்துக் கிடந்தது.

விபத்து காரணமாக புக்கிட் தீமா சாலையில் உள்ள மூன்று தடங்களில் இரண்டு தடங்கள் மூடப்பட்டன.

சிக்ஸ்த் அவென்யூ சாலைச் சந்திப்பு வரை தடுப்பு போடப்பட்டுள்ளது.

பாதசாரிகளும் ராயல்கிரீன் கூட்டுரிமைக் குடியிருப்பில் வசிப்பவர்களும் அந்த வழியாகச் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலை 11.30 மணி அளவில் தடுப்பு அகற்றப்பட்டது.

விபத்து காரணமாக அப்பகுதியில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்