தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெடிஷீல்டு லைஃப் திட்டம் விரிவாக மறுஆய்வு

2 mins read
1ece4b1e-795e-4052-ac40-2a0188e31f0f
இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களின் அடிப்படை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான ‘மெடிஷீல்டு லைஃப்’க்குச் மெடிசேவ் கணக்கிலிருந்து செலுத்த வேண்டிய சந்தாத் தொகை அதிகரிக்க இருக்கிறது.

தேசிய சுகாதாரக் காப்புறுதி மூலம் கிடைக்கும் வசதிகளை அரசாங்கம் விரிவாக்குவதால் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகமான மருத்துவக் கட்டணங்கள், புதிது புதிதாகச் சேர்க்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

இந்தக் காப்புறுதித் திட்டத்தை மறுஆய்வு செய்யும் நிபுணர் குழு தனது பரிந்துரைகளை இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தெரிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.

புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 2015 நவம்பரில் தொடங்கப்பட்ட ‘மெடிஷீல்டு லைஃப்’ சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தில் சிங்கப்பூரர்கள் சேருவது கட்டாயம்.

அதிகக் கட்டணங்களைக் கொண்ட சிகிச்சைகளுக்கு எல்லா சிங்கப்பூரர்களுக்கும் அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் உதவும் நோக்கம் கொண்டது இத்திட்டம்.

‘பி2’ மற்றும் ‘சி’ வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஆகும் அதிகமான மருத்துவக் கட்டணங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு அது உதவி வருகிறது.

மேலும், சலுகைக்குரிய 10 மருத்துவக் கட்டணங்களில் ஒன்பது இந்த காப்புறுதித் திட்ட உதவிக்குள் அடங்கும்.

“ஆனால், இனிமேல் 10க்கு 9 என்னும் இதுபோன்ற வரம்பு இருக்காது. காரணம், மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணங்கள் அதிகரித்தவாறே உள்ளன,” என்று திரு ஓங் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “பொது மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணங்கள் ஆண்டுக்கு 5 விழுக்காடும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணங்கள் ஆண்டுக்கு 7 விழுக்காடும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்றம் கண்டு வருகின்றன.

“சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் இவ்வாறு உயரும்போது சிரமம் தொடங்கிவிடும். எனவே, தற்போதைய காப்புறுதித் திட்டத்தை விரிவாக மறுஆய்வு செய்யுமாறு’ மெடிஷீல்ட் லைஃப் மன்றத்தில் இடம்பெற்று உள்ள 11 உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்,” என்றார்.

இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு இந்தத் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதற்கான சந்தாத் தொகை சராசரியாக 25 விழுக்காடு உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்