மோசடிக்கு எதிரான அம்சத்தை சிங்டெல் தொடங்கியது

2 mins read
df20d4d4-a1e2-4851-b35d-9b01c98fc84f
SingVerify என்னும் புதிய மோசடி முறியடிப்பு அம்சத்தை சிங்டெல் தொடங்கி உள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல் வாடிக்கையாளர்களின் கைப்பேசி சிம் அட்டைகளில் உள்ள அடையாளத் தரவுகளை இனிமேல் இணைய மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சமாகப் பயன்படுத்த முடியும்.

அதற்காக, சிங்வெரிஃபை (SingVerify)என்னும் புதிய மோசடி முறியடிப்பு அம்சத்தை சிங்டெல் தொடங்கி உள்ளது.

வாடிக்கையாளர்களின் இணைய வங்கி அல்லது இணைய வர்த்தகக் கணக்குகளின் விவரங்களை மோசடிக்காரர்கள் அணுகித் திருடிவிடாதவண்ணம் இந்த பாதுகாப்பு அம்சம் பின்னணியில் இயங்கும்.

வாடிக்கையாளரின் சிம் அட்டை இல்லாத சாதனத்தைப் பயன்படுத்தி அவர்களைப்போல மோசடிக்காரர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு சிங்வெரிஃபை அனுமதி மறுக்கும்.

பணம் அல்லது ரகசியப் பயனாளர் தரவுகள் அடங்கிய வங்கி மற்றும் இணைய வர்த்தகத் தளங்களைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பாதுகாப்பு அம்சம் உருவாக்கப்பட்டு உள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க சிங்வெரிஃபை சேவைக்கு இதுபோன்ற தளங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிங்டெல் புதன்கிழமை (மார்ச் 6) செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

இதுவரை, இணைய பங்கு வர்த்தக நிறுவனமான டைகர் புரோக்கர்ஸ் மற்றும் ஐபிஃபிகேஷன் என்னும் கைப்பேசி அங்கீகாரச் சேவை வழங்கும் நிறுவனம் சிங்வெரிஃபை சேவைக்குப் பதிவு செய்துள்ளன.

இதன் புதிய அம்சங்களை எந்தெந்த வங்கிகள் மற்றும் சேவைகள் அமல்படுத்த உள்ளன என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இதற்கிடையே, சிங்வெரிஃபை சேவை போன்ற பாதுகாப்பு அம்சத்தைச் சோதித்து வருவதாக எம்1 தொலைத்தொடர்பு நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்து உள்ளது.

சிம் அட்டை இல்லாத சாதனத்தில் இருந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் சிங்வெரிஃபை சேவை ஜூலை மாதத்திற்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது.

அவ்வாறு விரிவுபடுத்தப்படும் போது, பயனாளரின் அடையாளத்தை அவர் இருக்கும் இடம், கைப்பேசிச் செயலி இயங்கும் இருப்பிடத்துடன் அது ஒத்துப்போகிறதா என்பதை அந்தச் சேவை சோதிக்கும்.

குறிப்புச் சொற்கள்