இரண்டு மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரையிலான குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, கைக்குழந்தை கவனிப்புக்கென மேலும் ஒரு தெரிவு வழங்கப்படும்.
குழந்தைப் பராமரிப்பாளரின் வீட்டிலேயே கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள கட்டுப்படியான, நம்பத்தகுந்த சேவைகளை வழங்க இவ்வாண்டின் பிற்பாதியில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் புதிய குழந்தைக் கவனிப்பு முன்னோடித் திட்டத்தை அறிவித்தார். கட்டணங்களைக் கட்டுப்படியாக வைத்திருக்க பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, நியமிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் என்றார் அவர்.
முதன்மை நிறுவனங்கள் செயல்படுத்தும் கைக்குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கு, சலுகைகளுக்குப் பிறகு இடைநிலை வருமானக் குடும்பம் ஒன்று செலுத்தும் கட்டணத்திற்குச் சமமாக குழந்தைக் கவனிப்புக் கட்டணங்களை வைத்திருப்பதே நோக்கம் என்று திருவாட்டி சுன் கூறினார். அது மாதத்திற்கு ஏறத்தாழ $700 ஆகும்.
இந்தச் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்த குடும்பங்கள் குழந்தை மேம்பாட்டுக் கணக்கைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டின் பிற்பாதியில் மேல் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
குழந்தை மேம்பாட்டுக் கணக்கு, பாலர் பள்ளி, சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்களைச் செலுத்த, பிள்ளைகளுக்கான சிறப்பு சேமிப்புக் கணக்காகும்.
கட்டண உச்ச வரம்புகளையும், தகுதிவிதிகளையும் பூர்த்திசெய்தால், ஊழியர் சம்பளங்கள் போன்ற செலவுகளை ஈடுகட்ட முதன்மை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்படுகின்றன.
மூவாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் இந்த முன்னோடித் திட்டம், முதல் ஆண்டில் 500 கைக்குழந்தைகளுக்குச் சேவை அளிக்க நோக்கம் கொண்டுள்ளது. பின்னர் அந்த எண்ணிக்கையை ஏறக்குறைய 700ஆக அதிகரிக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.