தரகு முகவர்களும் விநியோக ஊழியர்களும் இவ்வாண்டு தங்களது வருவமான வரிப்படிவத்தை எளிமையாக தாக்கல் செய்ய சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களின் வருவாய் விவரங்கள் முன்கூட்டியே படிவத்தில் இடம்பெறுவதால் 2024ஆம் ஆண்டுக்கான வரிப்படிவ தாக்கல் 100,000க்கும் மேற்பட்ட தரகு முகவர்களுக்கு வசதியாக இருக்கும்.
அதேபோல, விநியோக ஊழியர்கள் தங்களது மொத்த ஆண்டு வருமானத்தின் நிலையான விகித அடிப்படையில் வர்த்தகச் செலவுகளுக்கான வரிக்கழிவுகளை பெறுவதும் எளிதாக அமையும்.
அனுமதிக்கப்பட்ட வர்த்தகச் செலவுகளுக்கு ஆன தொகையின் அடிப்படையில் கழிவு பெறும் முறை இதுவரை உள்ளது.
சுயதொழில் புரிவோர்க்கான எளிமையான வரிப்படிவ தாக்கல் மாற்றங்களை ஆணையம் புதன்கிழமை (மார்ச் 6) அறிவித்தது.
தரகு ஈட்டுவோரின் வருமானத் தகவல் விவரங்களை ஏறக்குறைய 650 தரகு வழங்கும் நிறுவனங்களில் இருந்து திரட்டி படிவத்தில் சேர்த்திருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
விவரங்களை அளிக்குமாறு தரகு வழங்கும் ஏறக்குறைய 700 நிறுவனங்களிடம் ஆணையம் கேட்டுக்கொண்டாலும், மார்ச் 1ஆம் தேதி கெடுவுக்குள் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அவை வரவில்லை.
முன்கூட்டியே இடம்பெற்று இருக்கும் தரகு வருமான விவரங்கள் துல்லியமானவையாக இருக்கும் என்றது ஆணையம்.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், தகுதிபெறும் தரகு முகவர்கள் இந்த தானியக்கக் கணக்கீட்டு முறையால் பலன்பெறுவர்.
தகுதிபெறும் தனிப்பட்டவர்கள், மொத்த வருமானத்தின் குறிப்பிடத்தக்க விழுக்காடு அடிப்படையில் வர்த்தகச் செலவுகளுக்கு ஆகியிருக்கும் தொகையை முடிவுசெய்து அதனைத் திரும்பப் பெற இந்தக் கணக்கீட்டு முறை அனுமதிக்கிறது.
இவ்வாறு வருமான வரிப் படிவத்தில் முன்கூட்டியே விவரங்கள் இடம்பெறுவதால் சில தரகு முகவர்கள் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் நேராது.
படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாத வரிசெலுத்துவோர் பட்டியலில் 1.8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

