காலாங் வட்டாரத்தில் 30 ஆண்டுகளுக்குமேல் வீற்றிருக்கும் ‘சிங்கப்பூர் இன்டோர் ஸ்டேடியம்’ எனப்படும் சிங்கப்பூர் உள்ளரங்குக்கு மாற்றாக உலகத்தரத்தில் உருவாகிறது புதிய சிங்கப்பூர் உள்ளரங்கு.
தற்போதைய சிங்கப்பூர் உள்ளரங்குக்கு அருகேயே புதிய அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்ளரங்கு அமைக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
மார்ச் 7ஆம் தேதி, தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது அமைச்சர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
புதிய உள்ளரங்கு தற்போதைய உள்ளரங்குக்கு அருகில் கட்டப்படுவதால், உள்ளரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏதும் இருக்காது. புதிய உள்ளரங்கின் கட்டுமானத்தின்போதுகூட தற்போதைய உள்ளரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
புதிய கட்டடத்துக்கான திட்டமிடல் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், அதன் கட்டுமானம் தொடங்கும் தேதி உள்ளிட்ட மேல்விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
புதிய உள்ளரங்கின் பரப்பளவு, குறைந்தபட்சம் தற்போதைய உள்ளரங்கின் அளவிற்காவது இருக்க வேண்டும். அதேவேளையில் வருங்காலத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அது கட்டப்படவேண்டும் என்பதைத் திரு டோங் சுட்டினார்.
“உயர்தரமான அனைத்துலக நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துவது முக்கியம். அதற்கு பலத்த வரவேற்பு இருக்கிறது. நமது போட்டியாளர்கள் முன்னேறிக்கொண்டுள்ளனர். எனவே, நாமும் தொடர்ந்து புத்தாக்கத்தை நாடவேண்டும். பெரிய நிகழ்ச்சிகளை சிங்கப்பூருக்கு ஈர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய உள்ளரங்கைக் கட்டுவதன் தொடர்பில் உலகின் ஆகச் சிறந்த அரங்குகள் சிலவற்றை சிங்கப்பூர் குழு நேரில் சென்று ஆய்வுசெய்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
12,000 அமரக்கூடிய தற்போதைய உள்ளரங்கை 1989ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் லீ குவான் யூ திறந்துவைத்தார். $90 மில்லியன் செலவில் அது கட்டப்பட்டது.


