தனது தந்தையின் விவரங்களைப் பயன்படுத்தி காரை வாடகைக்கு எடுத்து விபத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
டே ஹாவ் யிங், 36, எனப்படும் அந்த ஆடவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. அதனால், 2023 ஜனவரியில் தமது தந்தையின் உரிமத்தைப் பயன்படுத்தி வாடகைக்கு கார் எடுத்தார் அவர். அந்த கார் மூலம் ஏறக்குறைய $1,700 பணம் ஈட்டினார் அவர்.
2023 பிப்ரவரி மாதம் பொங்கோல் வட்டாரத்தில் வாடகை காரை டே ஓட்டிச் சென்றபோது அந்த கார் விபத்தில் சிக்கியது.
அது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்த டே, விபத்தின்போது காரை தமது தந்தை ஓட்டியதாகக் கூறினார்.
சிங்டெல் சந்தாவுக்கு விண்ணப்பிக்கவும் சலுகை விலையில் ஐஃபோன் பெறவும் தமது தாயின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மீண்டும் அவர் குற்றம் புரிந்தார். அந்த ஐஃபோனை $1,400க்கு விற்ற அவர் சிங்டெல் சந்தாவைச் செலுத்தவில்லை.
அந்தச் சம்பவம் குறித்து டேயிடம் விசாரணை நடத்தியபோது உரிமம் இன்றி கார் ஓட்டிய குற்றமும் வெளிச்சத்துக்கு வந்தது.
வியாழக்கிழமை (மார்ச் 7) டேவுக்கு இரு மாதங்கள், நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும் $2,300 அபராதமும் விதிக்கப்பட்டன.
சிறையில் இருந்து விடுதலை ஆன நாள் முதல் ஈராண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவும் வைத்திருக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக் குற்றம், போக்குவரத்துக் குற்றங்கள் ஆகியன உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை டே ஒப்புக்கொண்டார். 14 இதர குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


