கேலாங் நோன்புப் பெருநாள் சந்தைக்குச் செல்வோர் அதிக நகைகளை அணிய வேண்டாம் என்றும் அதிக ரொக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மார்ச் 8ஆம் முதல் ஏப்ரல் 10 வரை கேலாங்கில் நோன்புப் பெருநாள் சந்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று (மார்ச் 7) பாதுகாப்புக் குறித்து குறிப்பு ஒன்றை காவல்துறை வெளியிட்டது.
அதில் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
நோன்புப் பெருநாள் சந்தைக்கு, குறிப்பாக வாரயிறுதி நாள்களில் ஏராளமானோர் வருவார்கள். இதனால் சந்தைக்கு அருகே உள்ள சாங்கி ரோடு, சிம்ஸ் அவென்யூ வழியோரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகளை காவல்துறை கேட்டுக் கொண்டது.
சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
தற்போது நடைபெறும் சந்தையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சொந்த உடைமைகளை பொது இடத்தில் விட்டுச் செல்ல வேண்டாம். முன்பின் அறியாதவர்கள் மேலே தவறுதலாக இடிப்பது, கூச்சல் எழுப்புவது போன்ற திசை திருப்பும் சம்பவங்களில் கவனமாக இருக்க வேண்டும். தெரியாதவர்கள் நெருக்கமாக வந்தால் விழிப்புடன் இருக்க வேண்டும். மானபங்கத்திற்கு உள்ளானால் உடனே உதவிக்கு 999 எண்ணை அழைக்க வேண்டும். மோசடி அழைப்பு மற்றும் குறுந்தகவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைப்பேசியில் ஸ்கேம்ஷீல்ட் செயலியை நிறுவுவது உள்ளிட்ட ஆலோசனைகளை காவல்துறை வழங்கியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் சந்தையின்போது ஏப்ரல் நடுப்பகுதியில் ஏறக்குறைய மூன்று மில்லியன் பேர் வந்தனர். 36 நாள் சந்தை ஏப்ரல் 21ஆம் தேதி முடிவுற்றது.

